10% ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம்.. கூகுள் CEO அதிரடி முடிவு!
Dinamaalai December 22, 2024 01:48 AM

உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் தேடுபொறி மற்றும் முன்னணி இணையதளமான கூகுள், தனது நிர்வாக ஊழியர்களில் 10 சதவீதத்தை திடீரென பணி நீக்கம் செய்துள்ளது. இதற்கான உத்தரவை தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கூகுள் அதிக கவனம் செலுத்தி வரும் சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் இதுவரை செய்து வந்த பணிகள் வேறு சிலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சில பொறுப்புகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கூகுளின் மதிப்பை தக்க வைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுந்தர் பிச்சை கூறியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக நடைபெற்ற சந்திப்பின் போது சுந்தர் பிச்சை Googleyness என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். அதாவது இன்றைய காலத்திற்கு ஏற்ப கூகுளை அப்டேட் செய்ய வேண்டும் என ஊழியர்களிடம் கூறியுள்ளார். இந்த நவீன சகாப்தத்தில் நிறுவனம் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் திறன் கொண்ட பணியாளர்கள் கூகுள் நிறுவனத்தில் இருக்க வேண்டும் என்று சுந்தர் பிச்சை விரும்புகிறார்.

2022ல், கூகுள் 20 சதவீதம் கூடுதல் செயல்திறனுடன் செயல்பட வேண்டும் என்று சுந்தர் பிச்சை கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து ஜனவரி மாதம் கூகுளில் இருந்து 12,000 ஊழியர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். பிரபல வேலை வாய்ப்பு போர்ட்டலின் தரவுகளின்படி, 2024 இல் மட்டும், 539 தொழில்நுட்ப நிறுவனங்கள் 150,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.

கூகுள் மற்றும் ஓபன் ஏ.ஐ. (OpenAI) வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பும் தகவல்களைக் காட்ட நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. கூகுள் தன்னை அப்டேட் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதற்கும், அதற்காக சில ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கும் இதுவே முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஓபன் ஏ.ஐ. நிறுவனம் 2015 இல் நிறுவப்பட்டது. சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், ChatGPD எனப்படும் செயற்கை நுண்ணறிவு தளத்திற்கு பெயர் பெற்றது. இந்நிறுவனத்தில் 1,700 பேர் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.