இந்தியாவில் ரோஜ்கர் மேளா திட்டத்தின் மூலம் வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 71,000க்கும் மேற்பட்டோருக்கு பிரதமர் மோடி நாளை டிசம்பர் 23ம் தேதி பணி நியமனக் கடிதங்களை வழங்க உள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , "ரோஜ்கர் மேளாவின் கீழ் பிரதமர் மோடி 71,000 க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை டிசம்பர் 23ம் தேதி காலை 10:30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் வழங்க இருக்கிறார். அதன் பிறகு இந்நிகழ்வில் மோடி உரையாற்றுகிறார். ரோஜ்கர் மேளா என்பது நாடு முழுவதும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை என்பதற்கான அளிக்கும் பிரதமரின் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாக கருதப்படுகிறது.
அதன்படி ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெறும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பணியாளர்கள், உள்துறை அமைச்சகம், தபால் துறை, உயர் கல்வித் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை உட்பட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் சேர்வார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது