தேனி மாவட்டம் அல்லி நகரம் அரசு மேல்நிலைப் பள்ளி தெருவில் வசித்து வருபவர் சின்னசாமி. அவருக்கு லீலாவதி என்ற மனைவி உள்ளார். சின்னசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். தம்பதிக்கு கமேஷ் என்ற மகனும், கௌசல்யா (33) என்ற மகளும் உள்ளனர். திண்டுக்கல் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவரை கௌசல்யா திருமணம் செய்துள்ளார். பிச்சைமுத்து லாரி டிரைவர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கௌசல்யா கணவரை பிரிந்து தாய் லீலாவதியுடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை, கவுசல்யா வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் லீலாவதி மட்டும் தனியாக இருந்தார். அப்போது, அவரது வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்றனர். அப்போது, முகத்தை துணியால் மூடிக் கொண்டு ஒருவர் மாடிப்படியில் இறங்கி ஓடினார். சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, லீலாவதி பலத்த காயங்களுடன் சமையல் அறையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று லீலாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தபோது, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பிச்சைமுத்து லீலாவதியை கொலை செய்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீசாரிடம் பிச்சைமுத்து கூறுகையில், "மனைவி பிரிந்ததற்கு மாமியார் தான் காரணம் என நினைத்து, மனைவியை பார்த்து பேச சென்றேன். ஆனால் லீலாவதி வீட்டில் இருந்தார். எனக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அவர் கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.