கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், கோனியில் உள்ள அழகு நிலையம் ஒன்றில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, 21 வயது பெண் அழகு நிபுணராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தனியாக தங்கி வந்துள்ளார். மேலும், அதே பகுதியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த அமீர் உசேன் (24), ரபீக் இஸ்லாம் (25) ஆகியோர் கூலி வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 20ம் தேதி அதே பகுதியில் இளம்பெண் தனியாக நடந்து சென்றபோது, அமீர் உசேன், ரபீக் இஸ்லாம் இருவரும் சேர்ந்து அவரை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில் கோனி போலீஸார் வழக்குப் பதிந்து, தலைமறைவான இருவரையும் தேடியபோது, ஜோலார்பேட்டை வழியாக சென்னை செல்லும் ரயிலில் தப்பிச் செல்வது தெரிய வந்தது.
இந்நிலையில் இது குறித்து கேரள போலீசார் திருப்பத்தூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி, ரயிலில் தப்பியோடிய இருவரையும் பிடிக்க, திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா, தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்கு விரைந்த சிறப்புக் காவல் படையினர் ரயிலுக்காக காத்திருந்தனர். ஆனால், ஜோலார்பேட்டையில் ரயில் நிற்காததால், போலீசார் உடனடியாக ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்து, ரயிலை நிறுத்த நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி, நள்ளிரவு 1 மணியளவில் ஜோலார்பேட்டை பிளாட்பாரம் 2ல் இளைஞர்கள் வந்த ரயில் சிறிது நேரம் நின்றது. அப்போது, போலீசார் மூன்று குழுக்களாக பிரிந்து ரயில் முழுவதும் சோதனை செய்து, ரயில் இன்ஜின் கடைசி ஜெனரல் பெட்டியில் பதுங்கியிருந்த அமீர்உசேன், ரபீக் இஸ்லாம் ஆகிய இருவரையும் பிடித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அதன்பின், கேரள போலீசார் வரவழைக்கப்பட்டு, திருப்பத்தூர் போலீசார், இரு வாலிபர்களையும் அவர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.