போலீசார் பணிக்கு இடையூறு செய்தால் பவுன்சர்களை கைது செய்து சிறையில் அடைப்போம் என ஐதராபாத் காவல் ஆணையர் சி.வி. ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐதராபாத் போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த் சந்தியா தியேட்டர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வீடியோவை வெளியிட்டார். அதில் பேசியுள்ள அவர், “ சந்தியா தியேட்டர் வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் இறந்துவிட்டதாக அல்லு அர்ஜுனிடம் போலீசார் கூற முயன்றனர். ஆனால் தியேட்டர் மேலாளர் அல்லு அர்ஜுனிடம் செல்ல விடாமல் பவுன்சர்கள் தனி பாதுகாவலர்கள் தடுத்தனர். பின்னர் மீண்டும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதை அல்லு அர்ஜுனின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒரு பெண் இறந்துவிட்டதாகவும், சிறுவனின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சிக்கடப்பள்ளி ஏசிபி ரமேஷ் அல்லு அர்ஜுனிடம் நேரடியாக தெரிவித்தார். அப்போது கூட அல்லு அர்ஜுன் படம் முழுவதும் பார்த்துவிட்டு தான் செல்வேன் என்றார். பின்னர் நள்ளிரவு 12 மணி அளவில் டிசிபி நேரடியாக அல்லு அர்ஜுனிடம் சென்று தியேட்டரை விட்டு வெளியேறுமாறு கூறி, வலுக்கட்டாயமாக அல்லு அர்ஜுனை தியேட்டரை விட்டு வெளியே அழைத்து வரப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.
பவுன்சர்கள் எங்காவது பொதுமக்களை தள்ளி விட்டு காயம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பவுன்சர்களின் நடத்தைக்கு அவர்களை அனுப்பும் ஏஜென்சிகளும் அவர்களை நியமிக்கும் பிரபலங்கள் தான் பொறுப்பு. குறிப்பாக சீருடையில் இருக்கும் காவலர்களை தொட்டாலும் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்” என எச்சரித்தார்.