இன்று (22-12-2024) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் பிணவருமாறு:
2026 வெற்றி இலக்கு
எதிர்க்கட்சிகள் தனியாகவோ, ஒன்றாகவோ வந்தாலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியே வெற்றி பெறும்! சாதாரண வெற்றி அல்ல, சரித்திர வெற்றி! 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் கடுமையான உழைப்பே வழி. ஒவ்வொருவரும் 'என் தொகுதிதான் முதல் இடம், அதிக முன்னிலை எனக்கு' என உறுதியாக செயல்பட வேண்டும் என்றார்.
எதிர்க்கட்சிகளின் இரட்டை நிலை
பாஜக எப்போதாவது, தமிழகத்தின் நலனுக்காக செயல்பட்டதா? அமித்ஷா அம்பேத்கரை அவமதிக்கும் போது, அதிமுக ஒரு முறையாவது கண்டனம் தெரிவித்ததா? அவர்களது செயலை மக்கள் மறக்க மாட்டார்கள்.
2019ல் 20 தொகுதிகளில் போட்டியிட்டு 19.4%, 2024ல் 34 தொகுதிகளில் போட்டியிட்டு 20.4% வாக்குகளும் அதிமுக பெற்றுள்ளது. அதிமுக, 2019ஐ விட, 2024 நாடாளுமன்ற தேர்தலில் 12.58 விழுக்காடு வாக்குகள் குறைவாக பெற்றுள்ளது.
அதிமுக தொண்டர்களுக்கு சாதாரண கூட்டல் வகுத்தல் கணக்கே தெரியாது என்று நம்பி பொய்க்கணக்கை அவிழ்த்துவிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி சொன்ன கணக்கை அடிப்படை அறிவுள்ள அதிமுகவினரே நம்ப மாட்டார்கள்.
தி.மு.க.வின் தொண்டர்கள் ஒவ்வொருவரும் ஊடகங்களாக மாற வேண்டும். திராவிட இயக்கம் 75 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கொண்டு வந்த மாற்றங்களை இளைஞர்களிடமும், மக்களிடமும் எடுத்துச் செல்லுங்கள். வெல்வோம் 200! படைப்போம் வரலாறு!” என தெரிவித்தார்.