விரைவில் டிடிவி தினகரன் பயணிக்க கூடிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கப்பல் மூழ்கி விடும் என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து இருந்தார்.
இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், "இதே பழனிச்சாமி முன்பு என்ன தெரிவித்தார் தெரியுமா? டிடிவி தினகரன் ஒன்றுமே கிடையாது, அவர் பின்னால் நான்கு பேர் தான் இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால், இப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்பது ஒரு கப்பல் எனும் அளவுக்கு தற்போது அவர் பேச முன்வந்துள்ளார். உண்மையில் மெல்ல மெல்ல மூழ்கிக் கொண்டிருப்பது பழனிச்சாமியின் கப்பல் தான்.
பத்து தோல்வி பழனிச்சாமி என்று, தலைமைக்கு வந்த பிறகு, முதல்வர் ஆன பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வி அடைந்துள்ளார் பழனிசாமி.
புரட்சித்தலைவி அம்மா, புரட்சித்தலைவர் பெயரை கூறி வேறொரு உலகத்தில் மிதந்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. 2026 தேர்தலுக்குப் பிறகு அவர் பயணிக்கின்ற கப்பல் மூழ்கி விடும் அபாயத்தில் இருப்பதைத்தான் நான் பலமுறை சுட்டிக்காட்டி வருகிறேன்.
அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் திமுக என்னும் தீய சக்தியை வீழ்த்த முடியும் என்று அனைத்து தொண்டர்களும் சொல்கிறார்கள், அனைவருமே சொல்கிறார்கள்.
திமுகவின் தேர்தல் வெற்றிக்காகவும், எடப்பாடி பழனிச்சாமி தன் மீது உள்ள ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காகவும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார் என்பதுதான் உண்மை.
புரட்சித் தலைவர் கண்ட இயக்கத்தை எடப்பாடி பழனிச்சாமி அழித்துவிட நினைத்துக் கொண்டிருக்கிறார். நிச்சயமாக இயற்கை அதை தடுத்து நிறுத்தி விடும் என்று நான் நம்புகிறேன்" என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.