மூன்றாவது நாளாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் உணவுத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி பல்வேறு உணவு வகைகளை ருசித்தனர்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவு திருவிழா நிகழ்ச்சியை கடந்த 20ஆம் தேதி தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த உணவுத் திருவிழாவானது வருகின்ற 24 ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் மதியம் 12.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற உள்ளது.
அதேபோல் இந்த ஆண்டு உணவுத் திருவிழாவில் மொத்தம் 45 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பாரம்பரிய உணவுகள், கிராமிய உணவுகள், சைவம் மற்றும் அசைவ உணவுகள், சிறுதானிய உணவுகள், இனிப்பு வகைகள், சாலையோர உணவுகள், ஊர் போற்றும் உணவுகள், தின்பண்டங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட 45 வகையான பொருட்கள் மூன்று அரங்குகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 அரங்குகளில், மகளிர், சுய உதவி குழுவின் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 அரங்குகளில் இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்யப்படும். இந்த உணவு திருவிழாவிற்கு பொதுமக்கள் வருவதற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, அதில் குறிப்பாக பொதுமக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் உள்ளே வருவதற்கு ஒரு வழியும் வெளியேறுவதற்கு ஒரு வழியும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் உணவு திருவிழாவில் மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்யப்படவில்லை என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் குற்றஞ்சாட்டிய நிலையில், விழா ஏற்பாட்டு குழுவினர் கரூர் மாவட்ட உணவு அரங்கு எண்.17 இல் மாட்டிறைச்சி உணவு விற்பனை என விளக்கம் அளித்துள்ளனர்.