உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள வீட்டில் நீரஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்நிலையில், சனிக்கிழமை இரவு அவரது இரு மகன்களும் தங்களது அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது கொசுக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நள்ளிரவு 1 மணியளவில் கண்விழித்த அவர், கொசுபத்தியை ஏற்றி வைத்து தூங்கச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சுமார் ஒரு மணி நேரம் கழித்து வீட்டில் இருந்து திடீரென புகை வருவதை பார்த்த நீரஜ், எழுந்து பார்த்த போது குழந்தைகள் அறை தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அறையை திறந்து பார்த்த போது, அவரது மகன் வான்ஷ் பேச்சு மூச்சின்றி இறந்து கிடந்தார். தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மற்றொரு மகன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தீ விபத்தில் உயிரிழந்த அருண் 12ம் வகுப்பும், அவரது சகோதரர் வான்ஷ் 10ம் வகுப்பும் படித்து வருகின்றனர். காசியாபாத்தில் உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில் ஒரே வீட்டில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டிலுக்கு அடியில் கொசுபத்தி சுருளை ஏற்றி வைத்து தூங்கியதே தீ விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.