இன்னும் 10 ஆண்டுகள் விஜயகாந்த் இருந்திருந்தால் தமிழகத்தில் மாற்று அரசியலை உருவாக்கி இருப்பார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
தேமுதிக நிறுவன தலைவரும், தமிழக முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு 28ம் தேதி உயிரிழந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. தேமுதிக சார்பில் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைதி பேரணி நடத்தப்பட்டது. இதேபோல் தலைவர்கள் பலரும் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், விஜயகாந்தால் வாழ்ந்தவர்கள் ஏராளம், வீழ்ந்தவர்கள் யாருமில்லை. இரு பெரும் ஆளுமைகள் இருந்தபோதே கட்சி துவங்கியவர். தன்னைத் தானே செதுக்கி வளர்த்துக் கொண்டு, எல்லோராலும் நேசிக்கப்படுபவர் கேப்டன் விஜயகாந்த். இன்னும் 10 ஆண்டுகள் விஜயகாந்த் இருந்திருந்தால் தமிழகத்தில் மாற்று அரசியலை உருவாக்கி இருப்பார் என கூறினார்.