பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் அறிவிக்கப்பட்டதற்கு தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் முகுந்தன் திடீர் முடிவு செய்துள்ளார்.
புதுச்சேரி அருகேயுள்ள பட்டானூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமகவின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமகவின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பாமகவின் இளைஞரணி தலைவராக தனது மகள் காந்திமதியின் மகன் முகுந்தன் என்பவரை நியமிப்பதாக தெரிவித்தார். அப்போது அன்புமணி ராமதாஸ் கட்சியில் நான்கு மாதத்திற்கு முன்பாக வந்தவருக்கெல்லாம் பதவி வழங்க கூடாது நீண்ட நாட்களாக உள்ளவர்களுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ், கட்சியை உருவாக்கியவன் நான், கட்சியை உருவாக்கியவன் நான், கட்சியை உருவாக்கியவன் நான், வன்னியர் சங்கத்தை உருவாக்கியவன் நான். முடிவை நான் தான் எடுப்பேன். நான் எடுத்த முடிவுதான் கட்சியின் முடிவு. விருப்பம் இல்லாதவர்கள் யாராகினும் கட்சியிலிருந்து வெளியேறலாம் அன்புமணிக்கு மேடையிலேயே அறிவுறுத்தினார்.
இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் அறிவிக்கப்பட்டதற்கு தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாமகவில் தனக்கு எவ்வித பதவியும் வேண்டாம் என முகுந்தன் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாமக ஊடகப் பேரவை இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து முகுந்தன் விலகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கட்சியின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே தொடர முகுந்தன் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.