அமாவாசை தினத்தில் ஏன் உணவில் வெங்காயம், பூண்டு சேர்க்க கூடாது?
Dinamaalai December 30, 2024 02:48 PM

நமது வீட்டு பெரியவர்கள் சொன்னார்கள். அதனால் இதைக் கடைபிடித்து வருகிறோம் என்பதெல்லாம் சரி தான்.ஆனால் எப்போதாவது எதனால் இப்படி? என்று விளக்கம் கேட்டிருக்கீங்களா? அப்படி விளக்கம் கேட்டிருந்தால் இதையெல்லாம் மூட நம்பிக்கை என்று நம்மில் பலரும் இன்று ஒதுக்கி தள்ள மாட்டோம்.

அமாவாசை நாட்களிலும், தர்ப்பணம் செய்யும் நாட்களிலும், விரதம் இருக்கும் நாட்களிலும் நாம் உட்கொள்ளும் உணவில் வெங்காயம், பூண்டு சேர்ப்பதைத் தவிர்க்க சொல்கிறது நமது இந்து மதம்.

பொதுவாக இந்து மதத்தில் சொல்லப்படுகிற ஒவ்வொரு விஷயத்திற்குப் பின்னாலும் நிச்சயமாக ஒரு விஞ்ஞான ரீதியான காரணமும் இருக்கும். அதன்படி ஆயுர்வேத மருத்துவம் வெங்காயம் மற்றும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ள எப்போதும் பரிந்துரைப்பதில்லை. ஜோதிடம் வெங்காயம் மற்றும் பூண்டை ராகு கேது என்று கூறி, உணவில் ஒதுக்க சொல்கிறது. 

மருத்துவ ரீதியாக பார்த்தால், ஆரோக்கிய நலன்களை கருத்தில் கொண்டு பூண்டு வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால் மாதத்தில் இந்த 5 நாட்களிலாவது பூண்டு வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதைத் தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது.

அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது, முன்னோர்களுக்கு இடும் படையலில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமல் செய்வது சிறப்பான பலன்களை தரும். மேலும் அவர்களுக்கு பிடித்த விஷயங்களை தானம் செய்யலாம்.

அத்துடன் அமாவாசை தினத்தில் மாலையில் வீட்டின் உயரமான இடத்தில் தென் திசையில் முன்னோர்களை நினைத்து ஒரு விளக்கை ஏற்றி வைக்கலாம். இதன் மூலம் நமது சந்ததியினர் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் என்பது நம்பிக்கை.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.