திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் உயரமாக அமைக்கப்பட்டிருந்த படிகளில் தான் லக்கேஜ்களுடன் பயணிகள் சிரமப்பட்டு இத்தனை நாட்களாக ஏறி வெளியே வந்துக் கொண்டிருந்தனர். நீண்ட நாட்களாக லிப்ட் வசதியோ, எக்ஸலேட்டர் வசதியோ செய்து தரக் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ‘லிப்ட் வசதி’ திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் செய்யப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உலகப் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலங்களில் ஒன்றாக உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இது தவிர சூரசம்ஹாரம், தைப்பூசம், பெளர்ணமி, அமாவாசை, ஆணித்திருவிழா உள்ளிட்ட முக்கிய திருவிழா காலங்களில் பக்தர்கள் வருகை பலமடங்கு அதிகரித்து காணப்படும். திரும்பிய பக்கம் எல்லாம் என்று சொல்லத்தக்க வகையில் திருச்செந்தூரில் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளிக்கும்.
பக்தர்கள் கார்,வேன் போன்றவற்றில் வந்தாலும், பெரும்பாலான வெளியூர் பக்தர்கள் ரயில், பேருந்துகளில் வந்து செல்கின்றனர். இதில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வசதிக்காக தினமும் தூத்துக்குடி, மதுரை, நெல்லை, ராஜபாளையம், பழனி, திருப்பூர், கோவை, ராமேஸ்வரம், திண்டுக்கல், சேலம், ஈரோடு, கம்பம், திருச்சி, சென்னை, நாகர்கோவில், தென்காசி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், பக்தர்களுக்காக சென்னை, பாலக்காடு, நெல்லை, தூத்துக்குடியில் இருந்து ரயில் வசதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் எவ்வித அடிப்படைவசதிகளும் இல்லாமல் இருந்தது. இதனால் அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். குறிப்பாக முதல் நடைமேடையில் இருந்து 2-வது நடைமேடைக்கு செல்வதற்கு உயர்மட்ட நடைபாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் 2-வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயிலுக்கு செல்வதற்கு முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். மற்ற பயணிகளில் பெரும்பாலானோர் முதல் நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் குதித்து சென்று ஆபத்தான முறையில் ரயில் ஏறி வருகின்றனர். எனவே, ‘லிப்ட்’ மற்றும் ‘எஸ்க்லேட்டர்’ வசதி ெசய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில், தற்போது ரயில்நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதில் முதல் நடைமேடையில் இருந்து 2-வது நடைமேடைக்கு செல்வதற்கு ‘லிப்ட் வசதி’ செய்யப்பட்டுள்ளது. இந்த லிப்ட் வசதி கடந்த சில நாட்களுக்கு முன்பு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் சுற்றுலாபயணிகள், பக்தர்கள், முதியோர், மாற்றுதிறனாளிகள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேபோல், ரயில் நிலையத்தில் சுகாதார வளாகம், குடிநீர் வசதி, கூடுதல் ரயில்களை இயக்கும் வகையில் தண்டவாளம் விரிவாக்கம், பயணிகள் காத்திருக்கும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். திருச்செந்தூர் - சென்னைக்கு நேரடியாக மேலும் ஒரு விரைவு ரயிலும், கோவைக்கு ஒரு விரைவு ரயிலும் இயக்க வேண்டும். குறிப்பாக இரவு நேரத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நெல்லை மார்க்கமாக திருச்செந்தூருக்கு வருகின்றனர்.
முக்கிய திருவிழா நாட்களில் இந்த பக்தர்களின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்து காணப்படும். அந்த நாட்களில் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் திருச்செந்தூர் பக்தர்கள் கூட்டமாக காணப்படும். பஸ்சை தவிர வேறு போக்குவரத்து வசதி இல்லாததால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, நெல்லை-திருச்செந்தூர் இடையே இரவு ரயில் போக்குவரத்து தொடங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.