'பேஸ்புக்' மூலம் பழக்கமான காதலியை திருமணம் செய்ய உ.பி., வாலிபர் ஒருவர் சட்ட விரோதமாக எல்லை தாண்டி பாகிஸ்தான் சென்று போலீசிடம் மாட்டிக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட பெண்ணை விசாரித்த போது, அவரை திருமணம் செய்வதில் விருப்பமில்லை என கூறியுள்ளார்.
உ.பி.,யின் அலிகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாதல் பாபு. இவருக்கு பேஸ்புக் மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த சனா ராணி(21) என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இது நாளடைவில் காதலாக மாறி உள்ளது. பேஸ்புக் மூலம் 2.5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில், சனா ராணியை நேரில் பார்த்து திருமணம் செய்து விட வேண்டும் என்ற ஆசை பாதல் பாபு ஏற்பட்ட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தான் செல்வதற்கு தேவையான எந்த ஆவணமும் அவரிடம் இல்லை. ஆக காதல் கண்ணை மறைத்ததால், பாதல் பாபு சட்டவிரோதமாக பாகிஸ்தானிற்கு சென்றுள்ளார்.
ஆனால், அந்நாட்டின் பஞ்சாப் மாகாண போலீசிடம் அவர் சிக்கிக் கொண்ட போது, அவரிடம் போலீசார் விராசனை நடத்தியுள்ளனர். இதன் போது பாபு தனது காதல் கதையை கூறியுள்ளார்.
இதனையடுத்து போலீசார் சனா ராணியை போலீஸ் ஸ்டேசன் வரவழைத்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர் ஒரே வரியில், 'பாதல் பாபுவை திருமணம் செய்யும் ஆசை எல்லாம் இல்லை', எனக்கூறி காதலனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.
ஆனால், இந்த வாக்குமூலத்தை சனா ராணி தாமாக முன் வந்து கொடுத்தாரா அல்லது குடும்பத்தினரின் அழுத்தம் காரணமாக கொடுத்தாரா என உறுதியாக தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.அத்துடன் சனா ராணி வீட்டிற்கு சென்றதும், குடும்பத்தினர் அனைவரும் அந்நாட்டு உளவுத்துறையின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து பாதல் பாபு மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.