பனையூர் கட்சி அலுவலகத்தில் வைத்து இன்று காலை 10 மணிக்கு தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் பொதுசெயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பாக பொதுசெயலாளர் ஆனந்த் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வுகளையும், ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி வந்துள்ளார். இக்கட்சியின் தலைவர் விஜய்யும் விரைவில் மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என கூறியதால், இந்த நியமனங்கள் தொடர்பாக மாவட்ட பொறுப்பாளர்களுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகின்றது.
இரண்டு அல்லது மூன்று தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் வீதம் 105 முதல் 110 மாவட்ட செயலாளர்களை கட்சி சார்பில் நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கான வரையறையும் கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளபட்டுள்ள நிலையில் ஏற்கனவே மாவட்ட பொறுப்பாளர்களாக உள்ள நபர்கள் ஒரு வேலை மாவட்ட செயலாளர்களாக நியமனம் செய்யப்படவில்லை என்றால் கட்சியில் எந்த ஒரு சலசலப்பும் ஏற்படுத்தக் கூடாது என்பது தொடர்பாகவும், நியமனம் செய்யப்படும் நபர்கள் மாவட்டங்களில் கட்சியின் உட்கட்டமைப்பு நிர்வாகிகளை எப்படி நியமனம் செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் நாளை பேசப்பட உள்ளது.
அது மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் வேறு கட்சியில் இருந்து வந்து த.வெ.கா-வில் புதிதாக சேர்ந்த நபர்களுக்கும் ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து செயல்பட்டு வரும் நிர்வாகிகளுக்கும் மத்தியில் தொடர்ந்து உட்கட்சி பிரச்சனை ஏற்பட்டு வருவதால் அதனை சரி செய்வது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.