ரூ.4.89 லட்சம் கோடி சேதம்... கலிபோர்னியா காட்டுத்தீயை பேரிடராக அறித்த பைடன்!
Dinamaalai January 10, 2025 05:48 PM

 

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால், ரூ.4.89 லட்சம் கோடி வரையில் பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ள நிலையில், இதனை பேரிடராக அதிபர் பைடன் அறிவித்து உள்ளார். 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால், பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 70,000க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வேறு இடங்களுக்கு செல்லும்படி உத்தரவிடப்பட்டு உள்ளனர். காட்டுத்தீயால் புகை மண்டலம் பரவி காணப்படுகிறது. வெப்ப காற்றும் வீசி வருகிறது. இதனால் 30,000 கட்டிடங்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகும் என அஞ்சப்படுகிறது. இதுவரை காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர். 

இந்நிலையில் இந்த காட்டுத்தீக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரின் வீடுகளும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. லாஸ் ஏஞ்சல்ஸின் பல பகுதிகளிலும் காட்டுத்தீ விரைவாக பரவி வருகிறது. இந்த சூழலில், காட்டுத்தீயால் கலிபோர்னியாவில் பேரிடர் ஏற்பட்டு உள்ளது என பைடன் அறிவித்து உள்ளார். இதனை வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.

இதனால் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மாகாணம், பழங்குடியின பகுதிகள் மற்றும் உள்ளூர் பகுதிகளில் மீட்பு முயற்சிகளை மேற்கொள்வதற்கான அரசின் உதவியை வழங்குவதற்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனா  தற்காலிக வீட்டுக்கான மானியம் மற்றும் வீட்டை பழுது பார்ப்பது உள்ளிட்டவற்றுக்கு நிதியுதவி அளிக்கப்படும். பேரிடரில் இருந்து தனிநபர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மீண்டு வருவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்த வார தொடக்கத்தில் இருந்து காட்டுத்தீயானது 15,000 ஏக்கர் வன பகுதிகள் வரை பரவி வருகிறது. இதுவரை 10 ,000 ஏக்கர் பகுதிகள் எரிந்து விட்டன. ரூ.4.46 லட்சம் கோடி முதல் ரூ.4.89 லட்சம் கோடி வரையில் பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளது என முதற்கட்ட ஆய்வில் மதிப்பிடப்பட்டு உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.