சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 4.70 கிலோ திமிங்கலம் எச்சத்தை (அம்பர் கிரிஸ்) வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
விலை உயர்ந்த தரமான வாசனை திரவியங்கள், பல அரிய மருந்து பொருட்கள் தயாரிக்க திமிங்கல எச்சம் பயன்படுகின்றன. அதே சமயம் திமிங்கலம் எச்சம் வைத்திருக்க அரசு தடை செய்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 2ம் தேதி சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் திமிங்கலம் எச்சத்தை கடத்தி செல்வதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது.
உடனடியாக மாவட்ட வன அலுவலர் பிரபா உத்தரவின் பேரில் வனத்துறையினர் அங்கு சென்று சோதனையிட்ட போது ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த ராஜாராம் (53) என்பரிடம் ஈரப்பதத்துடன் 4.695 கிலோ திமிங்கல எச்சம் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
போலீசாரின் தொடர் விசாரணையில் அவர் தேனியில் இருந்து இந்த திமிங்கல எச்சத்தைக் கொண்டு வந்ததாகவும், இதை மற்றொருவருக்கு கொடுப்பதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து திமிங்கல எச்சத்தை பறிமுதல் செய்த வனத்துறையினர் ராஜாராமை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.