அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் சில நாட்களுக்கு முன் காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை விட்டு விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.
காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொள்ளை சம்பவம் நடப்பதால் போலீசார் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
பாலிசேட்ஸ், ஈட்டன், கென்னத் ஆகிய பகுதிகளில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், லாஸ் ஏஞ்சலஸ் எல்லைப் பகுதியில் உள்ள வென்டுரா கவுன்ட்டியில் புதிதாக நேற்று காற்றுத் தீ பற்றியுள்ளது. இதுவரை இந்த காட்டுத் தீயில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில், பாலிசேட்ஸ், ஈட்டன் அல்டாடெனா ஆகிய பகுதிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மூன்று நாட்களாக பற்றி எரியும் காட்டுத் தீயால் 10,000க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், அலுவலக கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும், 1.76 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இடங்களில்,போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தொடர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு, தீயில் சிக்கியுள்ளவர்களை தேடி மீட்டு வருகின்றனர்.
நேற்று வரை 10 சதவீத இடங்களில் மட்டுமே காட்டுத் தீ அணைக்கப்பட்டுள்ளது. மக்களை ஏற்கனவே வெளியேற உத்தரவிட்டதால் பெரியளவில் உயிரிழப்புகள் இல்லை என கூறப்படுகிறது.
இருப்பினும், பலரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். காட்டுத் தீயால் மான் உள்ளிட்ட ஏராளமான வன உயிரினங்களும், வீடுகளில் வளர்க்கப்பட்ட மாடு, குதிரை, நாய் போன்ற கால்நடைகளும் செத்து மடிந்துள்ளன.
சன்செட் பகுதியில் உள்ள ஹாலிவுட் மலைப் பகுதியிலும் 60 ஏக்கர் அளவுக்கு காட்டுத் தீ பரவியுள்ளது. அதை அணைக்கும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.
ஹாலிவுட் மலைப் பகுதியில் உள்ள நடிகர்கள் ஆண்டனி ஹாப்கின்ஸ், பில்லி கிரிஸ்டல் மற்றும் யூஜின் லெவி உட்பட பல பிரபலங்களின் வீடுகள் காட்டுத் தீயால் முற்றிலும் எரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த, தீ பரவலை தொடர்ந்து, காட்டுத் தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டதும், திரை நட்சத்திரங்கள் அனைவரும் வேறு மாகாணங்களுக்கு சென்றுவிட்டனர்.
இதற்கிடையே மக்கள் இல்லாத தெருக்களில் புகுந்து, எரிகிற கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டினர். இது போன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் கொள்ளை சம்பவங்கள் நடக்காமல் தடுக்க மாலை 6:00 மணியில் இருந்து காலை 6:00 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். இது குறித்து லாஸ் ஏஞ்சலஸ் போலீஸ் அதிகாரி ராபர்ட் லூனா கூறுகையில், “மக்கள் கட்டாயம் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் யார் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என எச்சரித்துள்ளார்.