ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த மாதம் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 5-ஆம் தேதி இந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்நிலையில், இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியே போட்டியிடுமா? அல்லது திமுக போட்டியிடுமா? என்ற குழப்பம் நீடித்து வந்தது. வெள்ளிக்கிழமை இரவு, அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஈரோடு கிழக்குத் தொகுதி தி.மு.க போட்டியிடக் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்திருந்தார். இதன் மூலம் குழப்பத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு, தி.மு.க போட்டியிடுவது என்று உறுதியானது.
இதைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதியில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என தி.மு.க தலைமை அறிவித்துள்ளது. நெசவாளர் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த வி.சி.சந்திரகுமார், முதுநிலை பொது நிர்வாகம் படித்துள்ளார். ஜவுளி மொத்த வியாபாரம் செய்துவரும் சந்திரகுமார், 1987-இல் அ.தி.மு.க-வில் வார்டு பிரதிநிதியாகத் தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். பின்னர் விஜயகாந்த் ரசிகர் மன்ற மாவட்டத் தலைவரானார். தே.மு.தி.க ஆரம்பிக்கப்பட்ட போது அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், விஜயகாந்த்தின் முக்கியத் தளபதியாகவும் விளங்கினார்.
வி.சி.சந்திரகுமார்2011 தேர்தலில் அ.தி.மு.க-தே.மு.தி.க கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோது, ஈரோடு கிழக்குத் தொகுதியில் தே.மு.தி.க சார்பில் நின்று சந்திரகுமார் வெற்றி பெற்றார். கருத்து வேறுபாடு காரணமாக தே.மு.தி.க-வில் இருந்து விலகி தி.மு.கவில் இணைந்த சந்திரகுமாருக்குக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதுடன், 2016 தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவிடம், வி.சி.சந்திரகுமார் தோல்வி அடைந்தார்.
2021 தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வசம் சென்றதால் வி.சி.சந்திரகுமார் போட்டியிட முடியாமல் போனது. அண்மையில் ஈரோட்டில் நடைபெற்ற சந்திரகுமார் இல்லத் திருமணத்துக்கு வந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் சந்திரகுமாருக்கு பாஸிடிவ் சமிஞ்சைகளைக் காட்டிச் சென்றதாக அப்போதே கட்சிக்குள் பேச்சு எழுந்தது. அதுமட்டுமில்லாமல் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிக வாக்காளர்கள் இருக்கும் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என அந்த சமூக சங்கமும் கோரிக்கை வைத்திருந்தது. அதன் அடிப்படையில், வி.சி.சந்திரகுமாரை தி.மு.க தலைமை டிக் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.