திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அருகே உள்ள பகுதியில் சந்தோஷ் (28), பவித்ரா (23) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆன நிலையில், இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று பவித்ரா தனது கணவனிடம் பொங்கலுக்கு துணி எடுத்து தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவரது கணவர் தட்டிக் கழித்து உள்ளார்.
இதனால் மனமுடைந்த பவித்ரா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து வீட்டிற்கு வந்த கணவர் நீண்ட நேரம் கதவைத் தட்டியும் மனைவி கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது பவித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் மன வேதனையடைந்த கணவர் வீட்டில் இருந்த விஷ பாட்டிலை எடுத்து சாப்பிட்டு மயங்கி கீழே விழுந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த உறவினர்கள் சந்தோஷை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பவித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.