ஜன.20ல் ட்ரம்ப் பதவியேற்பு விழா... இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு!
Dinamaalai January 12, 2025 07:48 PM

அமெரிக்காவின் 47வது பிரதமராக வரும் ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்க உள்ள டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.

ட்ரம்ப் -வான்ஸ் பதியேற்பு குழுவினர் அனுப்பிய அழைப்பின் பெயரில் ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார். இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ட்ரம்ப் - வான்ஸ் பதவியேற்பு குழுவின் அழைப்பின் பேரில் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்.

இந்த பயணத்தின் போது புதிதாக பதவியேற்க உள்ள நிர்வாகத்துடனும் விழாவுக்கு வரும் பிற பிரமுகர்களுடனும் ஜெய்சங்கர் சந்திப்பு நடத்துவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் அடைந்த வெற்றியை, இந்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி அமெரிக்க காங்கிரஸ் உறுதி செய்து தடையில்லா சான்று அளித்தது.

அமெரிக்க காங்கிரஸில் நடந்த விழாவில், 2024 தேர்தல் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் ட்ரம்பின் வெற்றிக்கு சான்றளிக்கப்படுவதாக அறிவித்த போது, குடியரசுகட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டினர். இதன் மூலம் வெள்ளை மாளிகைக்கு ட்ரம்ப் மீண்டும் வருவதற்கு இருந்த இறுதித் தடங்களும் நீங்கியது.

இதன்படி, வரும் 20ம் தேதி மதியம் அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்க உள்ளார். அவருக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்து வைப்பார். ட்ரம்ப்க்கு முன்பாக துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெ.டி.வான்ஸ் பதவி ஏற்பார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.