ரூ.10 கோடி ரொக்கம்... இபிஎஸ் உறவினர் நிறுவனத்தில் ரூ.750 கோடி வரி ஏய்ப்பு!
Dinamaalai January 12, 2025 08:48 PM

தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் ராமலிங்கம் தொடர்பான இடங்களில் ஈரோட்டில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த சோதனை நிறைவு பெற்ற நிலையில், சோதனையில் ரூ.750 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு அருகே வேலாங்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்த N.ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான RCCL கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது. அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினரான ராமலிங்கத்தின் மகன்கள் சூரியகாந்த், சந்திரகாந்த் ஆகிய இருவரும் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ளனர்.  இந்நிறுவனத்திற்கு ஈரோடு பெங்களூர் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில்  கிளைகள் உள்ளன.

தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் அரசு துறை கட்டுமானங்களில் இந்த நிறுவனம் கால் பதித்து பெரிய திட்டங்களை மேற்கொள்ளும் ஒப்பந்த்தாரர்களாக செயல்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் இந்நிறுவனம் தொடர்து வரி ஏய்ப்பு செய்து வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஜனவரி 7ம் தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து 5 நாட்களாக நடைபெற்று வந்த சோதனை நேற்றிரவு நிறைவு பெற்ற நிலையில் ஈரோடு ராமலிங்கம் தொடர்பான நிறுவனங்களில் ரூ.750 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்ததாக தெரிய வந்துள்ளது.

தமிழகம் முழுவதும் 26 இடங்களில் நடைபெற்ற சோதனையில் சுமார் ரூ.10 கோடி பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.