மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி கடந்த 2023ஆம் ஆண்டு 449.1 பில்லியன் கன மீட்டர் நிலத்தடி நீர் இருந்துள்ளது. இது 2024ல் 446.9 பில்லியன் கன மீட்டராக குறைந்துள்ளது.
பல்வேறு நீர் ஆதாரங்களில் இடம்பெற்றிருந்த நிலத்தடி நீரின் அளவு 2023ல் 407.2 பில்லியன் கன மீட்டராகவும், 2024ல் 406.2 பில்லியன் கன மீட்டராகவும் பதிவாகியுள்ளது. எடுக்கப்பட்ட நிலத்தடி நீரின் அளவு என்பது 241.3ல் இருந்து 245.6ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் நிலத்தடி நீரின் பாதுகாப்பு என்பது 2023ல் 73 சதவீதமாகவும், 2024ல் 73.4 சதவீதமாகவும் உள்ளது. மிகவும் அதிகப்படியாக சுரண்டப்பட்ட நிலத்தடி நீரின் இடங்கள் என்று பார்த்தால் 11 சதவீதத்தில் இருந்து 11.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு அதிகப்படியாக நிலத்தடி நீரை எடுத்த மாநிலங்கள் என்று பார்த்தால் பஞ்சாப், ஹரியானா, டெல்லி, மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகியவற்றை சொல்லலாம். இருக்கும் நீர் ஆதாரங்களில் இருந்து மிக மோசமான அளவிற்கு நிலத்தடி நீரை உறிஞ்சு எடுத்த பகுதிகளில் 25 சதவீதத்திற்கும் மேல் இருக்கும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் என்று பார்த்தால் டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தாத்ரா & நாகர் ஹாவேலி, டாமன் & டையூ ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதில் நெல் சாகுபடிக்காக நிலத்தடி நீரை எடுத்த மாநிலங்கள் என்று கவனித்தால் பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகியவற்றை சொல்லலாம். இந்தியாவில் நிலத்தடி நீருக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது பருவமழை தான். குறிப்பாக ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான கோடைக்கால பருவமழை மூலம் ஆண்டிற்கு 75 சதவீத மழைப்பொழிவு கிடைக்கிறது.
இதன்மூலம் ஓராண்டின் மொத்த நிலத்தடி நீரில் 61 சதவீதம் கிடைத்துவிடுகிறது. எனவே பருவமழையை சரியான முறையில் சேமித்து வைப்பதும், அவற்றை வீணாக்காமல் போதிய அளவில் பயன்படுத்துவதும் மிகவும் அவசியமாகிறது.