சென்னை ராயபுரம் பகுதியில் ஜூஸ் கடை ஊழியரை மிரட்டி கல்லாவில் இருந்து பணம் எடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக, போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கோவையைச் சேர்ந்த சுல்தான் (33), சென்னை ராயபுரம், வடக்கு மாதா கோயில் தெருவில் வசிக்கிறார். இவர் ராயபுரம், மேற்கு மாதா கோயில் தெருவில் உள்ள ஒரு ஜூஸ் கடையில் பணிபுரிகிறார். நேற்று (12.01.2025), ஜூஸ் கடையில் இருந்தபோது, அங்கு வந்த ஒருவர் ஜூஸ் குடித்துவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுவிட்டார்.
சுல்தான் அவரிடம் பணம் கேட்டபோது, அந்த நபர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி, பணம் கொடுக்க முடியாது என்று கூறி சுல்தானை மிரட்டினார். மேலும், ஜூஸ் கடையின் கல்லாவில் இருந்து ரூ.150 எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். ராயபுரம் காவல் நிலையத்தில் சுல்தான் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ராயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழு, முழுமையான விசாரணை நடத்தி, மேற்கண்ட குற்றத்தில் ஈடுபட்ட அறிவழகன் (25) என்பவரை கைது செய்தது. விசாரணையின் போது அம்பத்தூர் காவல் நிலையத்தில் அறிவழகன் மீது "கஞ்சா வழக்கு இருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அறிவழகன், விசாரணைக்குப் பிறகு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்" என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!