ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக பிரச்சாரத்தை துவங்கியது.
பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த பத்தாம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. சனி, ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து இரண்டாம் நாளாக வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. காலை 11 மணிக்கு தொடங்கி மூன்று மணி வரை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான மனிஷ் வேட்பு மனுக்களை பெற்றார். கடந்த பத்தாம் தேதி, முதல் நாளில் மூன்று சுயேட்சைகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் இரண்டாம் நாளான நேற்று 6 சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து பொங்கல் விடுமுறை தினங்கள் வருவதால், வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான 17-ம் தேதி ஒருநாள் மட்டும் மனு தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வி.சி.சந்திரகுமார் வரும் 17-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். வேட்புமனுவே தாக்கல் செய்யாமல் திமுக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. பெரியார் நகர் பகுதியில் திமுக வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து அமைச்சர் முத்துசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அவர்களுடன் கூட்டணிக்கட்சியினரும் வீடு வீடாக சென்று அரசின் சாதனைகளை விளக்கி துண்டறிக்கைகளை வழங்கி திமுகவிற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தனர்.