பெரியாரை நேரடியாக எதிர்த்த சீமானை நான் பாராட்டுகிறேன் - குருமூர்த்தி..!
Top Tamil News January 15, 2025 11:48 AM

பெரியார் குறித்த சீமானின் கருத்துக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், துக்ளக் விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, சீமானை பாராட்டி பேசியுள்ளார். சீமான் நேரடியாக பெரியாரை எதிர்த்து பேசியதற்கு பாராட்டுவதாக ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார்.

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்று தெரியாது. யார் வெற்றி பெறுவார்கள் என்று சொல்லவே முடியாது. விஜய் வேற அரசியலுக்கு வந்து இருக்கார். ஆனால் உறுதியாக ஒன்று சொல்கிறேன். திமுகவுக்கும், திமுக ஆட்சிக்கும், கலைஞர் குடும்பத்துக்கும் மிகப்பெரிய அவப்பெயர் ஏற்படும். இதனுடைய தாக்கம் தமிழ்நாட்டு அரசியலில் இருக்கத்தான் செய்யும்.இதற்கு எப்படி எதிர்க்கட்சியினர் வியூகம் வகுக்கப் போகிறார்கள் என்பது தான் முக்கியம். 

பாஜகவும் அதிமுகவும் சேர வேண்டும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. எடப்பாடி பழனிசாமியிடம் அரசியல் தலைவருக்கு உண்டான போக்கே இல்லை. எல்லா தலைவர்களுடனும் நான் பேசியிருக்கிறேன். எடப்பாடி பழனிசாமி நல்ல மனிதர் தான். அவருடன் பழகியிருக்கிறேன். 2021இல் கையில் வந்த ஒரு வாய்ப்பை எடப்பாடி தவறவிட்டுவிட்டார்.

பெரியாரை ஏற்றால் பெருமாளை ஏற்க முடியாது.. பெருமாளை ஏற்றால் பெரியாரை ஏற்க முடியாது. ஆனால் இதை தமிழ்நாடு பார்த்துக்கொண்டு இருக்கிறது. பெரியார் வக்கிரமானவர். கண்ணகியையும் இழிவுபடுத்துவார். பெண்களை இழிவுபடுத்துவார்.. தொல்காப்பியத்தையும் இழிவுபடுத்துவார். திருக்குறளை இழிவுபடுத்துவார்.. இதையெல்லாம் சொல்லியது சோ மட்டும் தான்.

சீமானோடு எனக்கும் அவருக்கு கருத்து ஒற்றுமை இருப்பதாக சொல்ல முடியாது. ஆனால் அரசியலில் முதன் முதலாக பெரியாரை நேரடியாக எதிர்த்ததற்காக நான் அவரை பாராட்டுகிறேன். ஏனென்றால் பெரியாரை எதிர்த்து யாரும் கூறக் கூடாது. உலகத்தில் பிறந்த யாராக இருந்தாலும் பெரியாரை எதிர்த்து சிலர் பேசத்தான் செய்வார்கள். அதை நாம் ஒன்னும் செய்ய முடியாது.பெரியாருக்கு எதிராக கருத்து பேசுகிறவர்களை எல்லாரும் சேர்ந்து பாய்வது என்பது தமிழகத்தில் 50, 60 ஆண்டுகளாக உள்ளது. அதை பத்திரிகை துறையில் உடைச்சது சோ. இப்போது சீமான் அரசியலில் உடைத்துக் கொண்டு இருக்கிறார். இது தமிழ்நாட்டிற்கு நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.