Health: இனிமேல் பழங்களின் தோலைத் தூக்கிப் போடாதீங்க..!
Vikatan January 15, 2025 03:48 PM

பழங்களை வாங்கியவுடன் நாம் முதலில் செய்யும் வேலை பழத்தின் தோல்களை நீக்குவதுதான். தோல்கள் என்றாலே தேவையற்றவை, அவற்றில் செடியில் தெளிக்கப்பட்ட ரசாயனங்களின் மிச்சம் இருக்கும் என்று நம் மனதில் பதிந்துபோனதன் விளைவுதான் இது. இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட பழங்களின் தோல்களுடைய ஆரோக்கிய பலன்களைச் சொல்கிறார், காரைக்குடியைச் சேர்ந்த உணவியல் நிபுணர் ஷில்பி பிஸ்த்ரி.

''பொதுவாகவே பழங்களின் உள்பகுதியைவிடத் தோலில்தான் அதிக அளவு சத்துகள் இருக்கும். அதிலும், சப்போட்டா, மாம்பழம், கொய்யா, திராட்சை, ஆப்பிள் போன்ற பழங்களின் தோல்களில் அதிக அளவு சத்துகள் அடங்கி இருக்கின்றன.

பழங்கள்

ஆப்பிள் தோலில் கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளன. டயட் மேற்கொள்பவர்களுக்கு ஏற்ற அதிகமான நார்ச்சத்தும், ஆன்டிஆக்சிடென்ட்களும் இருப்பதால் செல்கள் வலுவடைந்து, இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும், தோல் நீக்கப்படாத ஆப்பிள் பழத்தில் இருந்து எடுக்கப்படும் பழச்சாறு ரத்தத்தை சுத்தம் செய்து, ரத்தத்தில் கலந்துள்ள அமிலத்தன்மையை நீர்த்துப்போகச் செய்யும்.

கொய்யாப் பழத்தைத் தோலுடன் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சருமத்துக்குப் பொலிவையும் அழகையும் கூட்டுவதுடன் தோல் வறட்சியையும் போக்கும்.

ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும் வல்லமை மாம்பழத் தோலுக்கு உண்டு. நீரழிவு நோயாளிகள் மாம்பழத்தைத் தோலுடன் சாப்பிடுவது நல்லது.

கொய்யா

கிவி பழத் தோலில் வைட்டமின்கள், கனிமச் சத்துகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் அதிகமாக இருப்பதால், இதய நோய் வராமல் பாதுகாக்கும்.

வாழைப்பழத் தோலில் அதிக அளவு நார்ச் சத்தும், கால்சியமும் உள்ளன. மூட்டு வலி உள்ளவர்கள் தோலுடன் சேர்த்து பழத்தைச் சாப்பிட்டுவர, மூட்டுவலி சரியாகும். கொஞ்சம் கசப்புத்தன்மை இருக்கும் என்பதால், தேன் கலந்து சாப்பிடலாம்.

திராட்சையைத் தோலுடன் சாப்பிடும்போது, ரத்த உற்பத்தி அதிகரிக்கும். மலச்சிக்கலும் சரியாகும்.

மாதுளம் பழத் தோலை சூரிய ஒளியில் காயவைத்துப் பொடியாக்கி, வெண்ணெயுடன் சீரகம், உப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து உண்டுவர, நீண்ட நாள் வயிற்றுவலி சரியாகும்.

பன்னீர் திராட்சை!

சப்போட்டாவின் தோலில் உள்ள சில வேதிப்பொருட்கள் உடலில் உள்ள காயங்களை விரைவில் குணப்படுத்தக்கூடியவை. உடலில் இருக்கும் தீங்கு செய்யும் பாக்டீரியாவையும் அவை அழிக்கும். சருமப் பிரச்னை, ஆறாத புண் இருப்பவர்கள் தோலுடன் எடுத்துக்கொள்ளலாம்'' எனப் பட்டியலிடுகிறார் ஷில்பி பிஸ்த்ரி.

இனிமேல் தோலைத் தூக்கிப் போட மாட்டீங்கதானே?!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.