அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சுவாரசியங்கள்... டிராக்டர், கார், பைக் பரிசுகளை வென்ற இளைஞர்கள்..!
Vikatan January 15, 2025 03:48 PM

அனல் பறக்க நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில்  அதகளப்படுத்தி டிராக்டர், கார், பைக் என்று பரிசுகளை கைப்பற்றி வியக்க வைத்துள்ளார்கள் பங்கேற்பாளர்கள்.

முதல் பரிசு பெற்ற வீரர் கார்த்திக்

மதுரை மாவட்டத்தில் பிரபலமான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 2026 காளைகளும் 1735 வீரர்களும் பதிவு செய்திருந்தனர். 925 காளைகள் பரிசோதனை செய்யப்பட்டு, 888 காளைகள் அனுமதி அளிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் 37 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. ஒவ்வொரு சுற்றுக்கும் 50 பேர் வீதம் 500 வீரர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக விளையாடிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு 11 -வது சுற்றில் விளையாடினார்கள்.

ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன் இன்று காலை உற்சாகமாக தொடங்கிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 19 காளைகளை பிடித்து முதல் பரிசு பெற்ற திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் பட்டதாரியான் கார்த்திக்கிற்கு துணை முதலமைச்சர் பெயரில் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிஸ்ஸான் காருடன், கன்றுடன் கறவை மாடு பரிசு வழங்கப்பட்டது. 15 காளைகள் பிடித்த இரண்டாம் இடம் வந்த குன்னத்தூரை சேர்ந்த திவாகருக்கு மோட்டார் பைக்கும், 14 காளைகள் பிடித்து திருப்புவனத்தை சேர்ந்த முரளிதரன் மூன்றாமிடம் வந்தார்.

முதல் பரிசுபெற்ற காளைக்கு பரிசு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மலையாண்டி என்பவர் வி.கே.சசிகலாவின் பெயரில் விட்ட காளை சிறப்பாக விளையாடி முதல் பரிசாக தமிழக முதலமைச்சர் பெயரில்  11 லட்சம் ரூபாய் மதிப்பில் டிராக்டரும்,  கன்றுடன் கறவை மாடும் வழங்கப்பட்டது. பல ஊர்களில நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் சசிகலா பெயரில் காளைகளை விடுவதை இவர் வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த வெற்றி புத்தாண்டில் சசிகலாவுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று பெருமிதமாகக் கூறினார். இரண்டாம் இடம் வந்த  ஜி.ஆர்.கார்த்திக் என்பவரின் காளைக்கு டூ வீலர் பரிசாக வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்காளை-ரவிமணிமாறன் சகோதரர்களின் காளையை பிடித்தால் ஒரு லடசம் ரூபாயுடன் இரண்டு தங்கக்காசுகள் என்று பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த காளையை அவனியாபுரத்தை சேர்ந்த ரஞ்சித் அடக்கி பரிசை பெற்றுச் சென்று ஆச்சரியப்படுத்தினார்.

உயிரிழந்த வீரர் நவீன்குமார்

மிகவும் உற்சாகமாக நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மதுரை விளாங்குடியை சேர்ந்த வீரர் நவீன்குமார் மாடு முட்டியதில் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.