கீரைகள் குறுகிய காலப் பயிர் வகை என்பதால், ஆர்கானிக் முறையில் வளர்க்கப்படும் கீரைகளைத் தேர்ந்தெடுக்கலாம். கீரைகள் பிரெஷ்சாக இருக்க வேண்டும். வாடி வதங்கி இருக்கக் கூடாது. பூச்சிகள் அரித்த கீரையைத் தவிர்த்திடுங்கள்.கீரைகளை வாங்கிய பின் 20 நிமிடங்கள் வரை நீரில் ஊறவிட்டு அலசினால், அதில் உள்ள மண் போகும், பூச்சிக்கொல்லியின் வீரியம் குறையும். பூச்சிகள், கிருமிகள், பூச்சிக்கொல்லிகள், மாசு போன்றவற்றால் கீரைகள் பாதிக்கப்பட்டு வளர்வதால், கீரைகளை சமைப்பதற்கு முன், நீரில் நன்றாகக் கழுவுவது அவசியம்.
கீரைகளைப் பொரிக்கவோ, நீண்ட நேரம் வேக வைக்கவோ கூடாது. அதே நேரம், போதுமான அளவு வெந்திருக்க வேண்டும். கீரைகளை வேக வைக்க, சிறிது அளவு நீர் ஊற்றினாலே போதும்.மழை, வெயில் என அனைத்துக் காலங்களிலும் கீரைகளை சாப்பிடலாம். ஆனால், அதன் இயல்பைப் பொறுத்து கீரைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இரவில் கீரை சாப்பிடவே கூடாது. கீரைகளில், நார்ச்சத்துகள் மிகுதியாக இருப்பதால், எளிதில் செரிமானம் ஆகாது.
கீரையுடன் முட்டை, பால், தயிர், அசைவம் போன்றவற்றை சேர்த்து சமைக்கக்கூடாது. கீரை சாத்வீக உணவு என்பதால் இவை ஒன்றாக சேர்ந்தால் மலச்சிக்கலையும், வயிற்றுப் பிரச்சினைகளையும் உருவாக்கும். கீரையைவிட பருப்பின் அளவு குறைந்திருப்பதே நல்லது. சமமாகவோ, அதிகமாகவோ இருக்கக்கூடாது. தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.
இந்த கீரையில் இரும்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து நிறைந்துள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் அணுக்களை அதிகரித்து குழந்தைபேற்றை அடையச்செய்யும். மேலும் வயிற்றுப் போக்கு, சிறுநீரக நோய், ரத்த சோகை, மலச்சிக்கல், வாயு தொல்லை, வயிற்றுப்புண்ணிற்கு இந்த கீரை வகை சிறந்தது.
ஆரைக்கீரை:பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள், மூளை கோளாறு மற்றும் பால் வினை நோய்களுக்கு கை கண்ட மருந்து இந்த ஆரைக்கீரை. இது வாய்க்கால் ஓரங்களில் வளரும் ஒரு கொடி வகை. இதனை துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும் என்று கூறப்படுகிறது.
சுங்கான்கீரை:இது ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்த உதவும். இதில் ஆக்ஸலேட்கள் அதிகளவில் இருப்பதால் பூச்சிக்கடிகளுக்கு மருந்தாக பயன்படுத்தலாம். இந்த கீரையை புளி சேர்க்காமல் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் குடல்புண் குணமாகும்.
சதக்குப்பைக்கீரை:இந்த கீரையை சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் நீங்கும். மேலும் கர்ப்பப்பை பிரச்சனைகள் உள்ள பெண்கள் இந்த கீரையுடன் சீரகம், மிளகு மற்றும் பூண்டு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை ஆரோக்கியம் மேம்பட உதவும்.
சிறுகீரை:இந்த கீரை வகையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும். பித்தம், வாத தோஷங்கள் நாளடைவில் குறையும். மேலும் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை பலப்படுத்த உதவும். மது குடிப்பதால் உண்டாகும் குடல் புண்களை ஆற்றவும் இந்த கீரை உதவுகிறது.
தவசிக்கீரை:இந்த கீரை வகை அனைத்து வைட்டமின் சத்துக்களை கொண்டுள்ளது. உடற்சோர்வு, சர்க்கரை நோயால் ஏற்படும் உடல் பலவீனம் குணமாக வாரம் ஒருமுறை தவசிக்கீரை சாப்பிடலாம்.
சண்டி கீரை:பெண்களுக்கு ஏற்படும் மூட்டு வலி, முதுகு வலி மற்றும் இடுப்பு வலிகளை போக்குவதுடன், சளி, சுவாசக் கோளாறு மற்றும் நெஞ்சு வலி போன்றவற்றை குணமாக்க உதவுகிறது. இந்த கீரை உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் மிக்கது. இதனை பாசிப்பருப்பு அல்லது துவரம் பருப்பு சேர்த்து கூட்டாக செய்து சாப்பிட்டு வந்தால் வாதம் குணமாகும்.
வெந்தயக்கீரை:தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த இந்த கீரை ஜீரண சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் நீரிழிவு நோய் மற்றும் காசநோய், பார்வை குறைபாடுகளையும் சரி செய்ய உதவும். படுக்கைக்குச் செல்லும் முன் வெந்தயக் கீரையை நன்கு அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள், முக வறட்சி மறையும்.
முளைக்கீரை:இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் கொண்ட இக்கீரைபை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியை தருகிறது. நரம்பு தளர்ச்சிக்கு சிறந்தது.
பருப்புக்கீரை:கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்கள், நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய கீரை இது. ஒமேகா 3, கால்சியம், வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் இந்த கீரையில் நிறைந்துள்ளது.