உஷார்.. இன்று தமிழகத்தில் வழக்கத்தை விட வெப்பநிலை உயர வாய்ப்பு!
Dinamaalai February 05, 2025 04:48 PM

பத்திரமா இருங்க மக்களே... இன்று தமிழகத்தில் வழக்கத்தைவிட வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்க. தேவையான அளவு தண்ணீர் அருந்துங்கள். பகல் நேரத்தில் அவசியமில்லாமல் கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகளைத் தனியே வெளியில் அனுப்பாதீங்க. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் பனிமூட்டம் காணப்படும். வெப்பநிலை 21 டிகிரி முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.


தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளி்ல் நேற்று காலை மிதமான, அடர்ந்த பனிமூட்டம் நிலவியது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்றும் ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.