சமாதி ஆனாரா கோபன்சுவாமி? - சந்தேகம் கிளப்பும் ஊர்மக்கள், கல்லறையை திறக்க குடும்பத்தினர் எதிர்ப்பு!
Vikatan January 16, 2025 03:48 PM

கேரள மாநிலம, திருவனந்தபுரம் மாவட்டம், நெய்யாற்றின்கரை ஆறான்மூடு பகுதியைச் சேர்ந்தவர் கோபன் சுவாமி. மணி என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு 3 மகன்கள். மூத்த மகன் இறந்துவிட்ட நிலையில் தற்போது 2 மகன்கள் உள்ளனர். ஆரம்பத்தில் நெய்த்து தொழில் செய்துவந்தவர் பின்னர் சுமைதூக்கும் தொழிலாளியாக இருந்துவந்தார். சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர் தனது வீட்டை ஒட்டி கைலாசநாதர் ஆலயம் ஒன்றை அமைத்து தனது பெயரை கோபன்சுவாமி என மாற்றிக்கொண்டு பூஜைகள் செய்துவந்தார். அவருக்கு உதவியாக அவரது இளைய மகன் ராஜசேகரன் பூஜைகளில் ஈடுபட்டார். இதற்கிடையே சுகர் போன்ற காரணங்களால் உடல்நிலை பாதிக்கப்பட்டு படுக்கை நோயாளியானர் கோபன்சுவாமி.

இந்த நிலையில்தான், கோபன்சுவாமியைக் காணவில்லை என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நெய்யாற்றின்கரை காவல் நிலையத்தில் சில நாள்களுக்கு முன் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், முதற்கட்டமாக கோபன்சுவாமியின் மனைவி சுலோச்சனாவிடம் விசாரணை நடத்தினர்.

கோபன்சுவாமி சமாதி ஆனதாகச் சொல்லப்படும் கல்லறை

கோபன்சுவாமி 5 ஆண்டுகளுக்கு முன்பே சமாதி பீடம் ஒன்றை தனக்காக கட்டி வைத்திருந்ததாகவும், கடந்த 9-ம் தேதி அவர் சமாதி ஆகிவிட்டதாகவும் கோபன்சுவாமியின் மனைவி சுலோச்சனா போலீஸாரிடம் கூறினார். மேலும் அவர் சமாதியான கல்லறை ஒன்றையும் காட்டினார். உடல்நிலை சரியில்லாமல் இருந்த கோபன்சுவாமி கடந்த 9-ம் தேதி காலை 10.30 மணியளவில் நடந்து சென்று சமாதியில் அமர்ந்ததாகவும்... அப்போது தனது தலையில் கைவைத்து ஆசீர்வதித்ததாகவும், அவரது விருப்பப்படி வாசனை திரவியங்களை பூசி சமாதி பூஜைகள் செய்ததாகவும் மகன் ராஜசேகரன் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கோபன்சுவாமி

கோபன்சுவாமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய போலீஸார், கல்லறையை திறந்து விசாரணை நடத்த முயன்றனர். சமாதியை திறக்க அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில் தடை ஏற்பட்டது. இதையடுத்து ஆர்.டி.ஓ முன்னிலையில் சமாதியை திறந்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். சமாதியை திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்த கோபன்சுவாமியின் மகன் தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தார். மேலும், சமாதியை திறக்க தடைவிதிக்க வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். மனுவை விசாரித்த கோர்ட் கோபன்சுவாமியின் இறப்பு சான்றிதழ் எங்கே என கேள்வி எழுப்பியது. இறப்பு சான்றிதழ் இல்லாமல் இருந்தால் அது அசாதாரண மரணம் என கருதவேண்டியது வரும். இறப்பு சான்றிதழை சமர்ப்பித்தால் உங்கள் மனுவை பரிசீலிக்கலாம் என ஐகோர்ட் தெரிவித்திருந்தது. மேலும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறுவதால் கல்லறையை திறந்து விசாரணை நடத்த தடை இல்லை எனவும் கோர்ட் தெரிவித்துள்ளது. இதையடுத்து விரைவில் கோபன்சுவாமியின் சமாதியை திறந்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.