மும்பையில் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டு பாந்த்ரா பங்களாவில் வசித்து வருகிறார். இன்று அதிகாலை 2.30 மணிக்கு நடிகர் சைஃப் அலிகான் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, திருடர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்துவிட்டார். அவரைப் பார்த்துவிட்ட வீட்டு வாட்ச்மென் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர்களின் சத்தத்தை கேட்ட சைஃப் அலிகான், உறக்கத்தில் இருந்து எழுந்து வந்தார். அவர் திருடரை அங்கிருந்து விரட்ட முயன்றபோது, இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இந்த சண்டையில் சைஃப் அலிகானை அந்த நபர், தான் கொண்டு வந்திருந்த கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு சம்பவ இடத்தில் இருந்து இருட்டில் தப்பி ஓடிவிட்டார். அதற்குள் வீட்டில் இருந்த மற்றவர்களும் எழுந்து விட்டனர். அவர்கள் அதிகாலை 3.30 மணிக்கு சைஃப் அலிகானை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மனைவி கரீனா கபூருடன் சைஃப் அலிகான்அவருக்கு ஆபரேசன் செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் நீரஜ் தெரிவித்தார். இது குறித்து மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி நீரஜ் கூறுகையில், ''சைஃப் அலிகான் அதிகாலை 3.30 மணிக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு 6 காயங்கள் இருந்தது. கழுத்து பகுதியில் ஒரு காயம் இருந்தது. அதில் இரண்டு காயங்கள் மிகவும் ஆழமாகப் பட்டிருந்தது. அவருக்கு காலை 5.30 மணிக்கு நரம்பியல் நிபுணர் டாக்டர் நிதின் தலைமையில் ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார். மருத்துவமனையில் சைஃப் அலிகான் உறவினர்கள் உடனிருந்து கவனித்துக்கொண்டனர். சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தில் சைஃப் அலிகான் வீட்டு வேலைக்காரர் ஒருவரும் லேசாக காயம் அடைந்தார். அதிர்ஷ்டவசமாக திருடன் வீட்டின் உள்பகுதிக்குள் செல்லவில்லை. இதனால் சைஃப் அலிகான் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு எந்த விதப் பிரச்னையும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சைஃப் அலிகான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கத்திக்குத்து விழுந்ததா அல்லது திருடனை எதிர்த்து போராடியபோது காயம் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். குற்றப்பிரிவு போலீஸாரும் தனியாக விசாரித்து வருகின்றனர்'' என்றார். திருடனை பிடிக்க போலீஸார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். நடிகர் வீட்டிற்குள் நுழைந்து திருட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து சைஃப் அலிகான் தரப்பில் விசாரித்தபோது, மனைவி கரீனா கபூர் சம்பவம் நடந்தபோது வீட்டில் இல்லை. அவர் தனது சகோதரி கரிஷ்மா கபூர் வீட்டிற்கு சென்று இருந்தார். அவர் நேற்று பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு சகோதரி வீட்டில் தங்கி இருந்தார். சம்பவம் குறித்து கேள்விப்பட்டு விரைந்து ஓடிவந்தார் என்று கூறப்படுகிறது.