பொங்கலை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “நேசிப்பாயா”. விஷ்ணுவரதன் இயக்கிய இந்த படத்தில் ஆகாஷ் முரளி கதாநாயகனாகவும் அதிதி சங்கர் கதாநாயகியாகவும் நடித்திருந்தார்.
அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்த ஆகாஷ் முரளி தனது முன்னாள் காதலி தியா கதாபாத்திரத்தில் நடித்த அதிதி சங்கர் கொலை குற்றத்திற்காக போர்ச்சுக்கல் நாட்டில் கைது செய்யப்பட்டதை அறிந்து கொள்கிறார்.
பிரேக் அப் ஆகி இருந்தாலும் தியாவை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும் அர்ஜுன் போர்ச்சுக்கல் நாட்டிற்கு செல்கிறார். இடையிடையே இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகள் படத்தில் வந்து செல்கிறது.
தனது காதலிக்காக போர்ச்சுக்கல் நாட்டில் அர்ஜுன் நடத்தும் விசாரணை, தொழிலதிபருக்கான ஈகோ, உதவி செய்யும் லோக்கல் தாதா, தியா இருக்கும் சிறைக்குள் கொலை வெறியோடு இருக்கும் பெண் கைதி, தன் பாலின ஈர்ப்பாளர்கள் என படம் விறுவிறுப்பாக செல்ல தியா உண்மையில் கொலை குற்றத்தை செய்தாரா? அவருக்கு என்ன ஆனது? அவரை அர்ஜுனால் காப்பாற்ற முடிந்ததா? என்பதுதான் மீதி கதை.
படத்தில் இருவரது காதல் ஒரு ட்ராக்கிலும் திரில்லர் மற்றொரு ட்ராக்கிலும் செல்வது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது. ஆனால் ஏனோ படம் பார்வையாளர்களோடு ஒன்றாமல் என்னவோ நடந்தால் நமக்கு என்ன என்பது போன்று தான் நகர்ந்து உள்ளது. அறிமுக நடிகரான ஆகாஷ் முரளி நடிப்பில் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.
அதிதி சங்கர் கதாபாத்திரத்திற்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தார். போலீஸ் அதிகாரியாக பிரபுவும் தொழிலதிபராக சரத்குமாரும் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள். இந்த படம் எந்த அளவிற்கு வெற்றியை பெரும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.