மக்கள் அதிக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அதன் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஆனந்த விகடன் குழுமம் மற்றும் ஆர்.கே நீரிழிவு கால் மற்றும் பாத சிகிச்சை மருத்துவமனை (RK Diabetic Foot & Podiatry Institute) இணைந்து `பாதமே நலமா?’ என்ற மாபெரும் விழிப்புணர்வுக் கருத்தரங்கை நடத்தியது. நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கலந்துகொண்டு பயன்பெற்ற இந்நிகழ்வில் 6 மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் இயக்குநர் மருத்துவர் ராஜேஷ் கேசவன், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கவுரை நிகழ்த்தினார். “கட்டுப்பாடு இல்லாத நீரிழிவு நோயின் விளைவாக கால் மற்றும் பாதப் பிரச்னைகள் வரும். ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை பெற்று பராமரிக்கவேண்டும்” என்றார். கால் மற்றும் பாதப் பராமரிப்புக்கான வழிகளை அவர் விளக்கினார்.
`பாதமே நலமா?’ விழிப்புணர்வுக் கருத்தரங்குநீரிழிவு நோயில் இதய பாதிப்பு குறித்துப் பேசிய மருத்துவர் அருண் ரங்கநாதன், “மாரடைப்பு வருவதைத் தடுக்க, நமது வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கத்தை மேம்படுத்துவது அவசியம். அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது சிறந்த அணுகுமுறை” என அறிவுறுத்தினார். கல்லீரல் கொழுப்பு குறித்து விளக்கிய மருத்துவர் தரணி, “ஆல்கஹால் தவிர்த்து, கல்லீரல் தொடர்பான பிரச்னைக்கு நீரிழிவு, உடல் பருமன், உணவு முறை ஆகியவையும் காரணம். சரியான உடற்பயிற்சி, சரிவிகித உணவு மற்றும் டயட் ஆகியவை மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும்.” என்றார். மருத்துவர் சிந்துஜா, “காலில் சிறிய பாதிப்புகள் ஏற்படும்போதே கவனிப்பது அவசியம்” என அறிவுறுத்தினார்.
மருத்துவர் ஜெயநிவாஷ், “நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் முன்னெச்சரிக்கை” என விளக்கினார். மருத்துவர் ராஜேஷ் குமார், “சிறுநீரகம், இதயம், கண் மற்றும் நரம்பின் பாதிப்பு ஆகியவற்றைத் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். இதில் ஏதாவது ஓர் உறுப்பில் பிரச்னை இருந்தாலும் சிகிச்சை வேண்டும்” என விளக்கமளித்தார்.
`பாதமே நலமா?’ விழிப்புணர்வுக் கருத்தரங்குபட்டிமன்றப் பேச்சாளர் ராஜா ‘‘இந்த விழிப்புணர்வு நிகழ்வு நல்ல முயற்சி. ஆண்டு தொடக்கத்தில் முதல் ஞாயிற்றுக்கிழமையில் இவ்வளவு மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டது மிகவும் அபூர்வம். நமது நோய் தீர்த்து, ஆரோக்கியமாக வாழ அக்கறை காட்டும் மருத்துவர்களுக்கு நாம் நன்றியுடன் இருப்பது அவசியம்” என உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ரூ. 1,000 மதிப்புள்ள Foot care kit வழங்கப்பட்டது. மருத்துவர்களின் விளக்க உரைகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக அவர்கள் மகிழ்வுடன் தெரிவித்தனர்.