தமிழக கர்நாடக எல்லையில் உள்ள கிராமம் ஒன்றில் சந்கராந்தி பண்டிகையை முன்னிட்டு, கொளுந்து விட்டு எரிந்த தீக்குண்டத்தில் கால்நடைகளை தாண்ட விட்டு கிராம மக்கள் விநோத நேர்த்தி கடன் செலுத்தினர்.
சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்குட்பட்ட அஜிபுரம் அருகே உள்ள பசவனதொட்டி கிராமத்தில் ஆண்டு தோறும் சங்கராந்தி பண்டிகையை தொடர்ந்து வரும் மாட்டுப்பொங்கல் தினத்தில் கால்நடைகளை தீயில் தாண்ட விட்டு வழிபடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஊரின் மையப்பகுதியில் விறகுகளை எரித்து குண்டம் உருவாக்கினர். தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியதும் கிராம மக்கள் ஒவ்வொருவராக தங்களது மாடுகளை பிடித்து வந்து தீக்குண்டத்தை தாண்டினர். இது போல் செய்வதால் கால்நடைகள் நோய் நொடியின்றி ஆரோக்யமாக இருக்கும் என்பது இவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
முன்னதாக மாடுகளை குளிப்பாட்டி மலர் மாலைகள் அணிவித்து அலங்கரித்து அழைத்து வந்திருந்தனர். பசவனதொட்டி மட்டுமன்றி சுற்றுபகுதி கிராமங்களை சேர்ந்த மக்களும் இந்நிகழ்வில் பங்கேற்று 100.க்கும் மேற்பட்ட கால்நடைகளை தீக்குண்டத்தில் தாண்டி வர செய்து நேர்த்தி கடன் செய்தனர். இந்நிகழ்வின் போது 2 மாடுகளுக்கு தீக்காயம் ஏற்பட்டது.