தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, விஜய் தன்னுடைய மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராக செயல்படுவோம் என்று கூறியுள்ளார். எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஒழித்து விடலாம். ஆனால் இந்துத்துவா சக்திகளை மதவாத சக்திகளை ஒழிக்க வேண்டும் என்றால் விஜய் இந்தியா கூட்டணிக்கு வரவேண்டும். அதுதான் விஜய்க்கும் அவருடைய இயக்கத்துக்கும் நல்லது. இதை நான் நாட்டின் குடிமகனாக சொல்கிறேன் என்று கூறினார்.
அதன்பிறகு நடிகர் விஜய் பரந்தூர் செல்வது குறித்த கேள்விக்கு காவல்துறை அவருக்கு அனுமதி கொடுத்துள்ளதால் அவர் அங்கு செல்கிறார். மக்கள் இந்த விவகாரத்தில் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் எங்களுடைய விருப்பமும் என்று கூறினார். மேலும் முன்னதாக அமைச்சர் துரைமுருகன் பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி பேசியது அதிருப்தியை ஏற்படுத்தியதாக செல்வப் பெருந்தகை கூறிய நிலையில் தற்போது திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு எதிராக பேசி வரும் விஜயை இந்தியா கூட்டணிக்கு அழைத்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.