எகிறும் எதிர்பார்ப்பு... மக்களிடையே நேரடி அரசியல்?! இன்று பரந்தூர் செல்கிறார் விஜய்!
Dinamaalai January 20, 2025 10:48 AM

இன்று தமிழக அரசியலில் முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக மக்களிடையே அரசியல் தலைவராக நேரடியாக களமிறங்குகிறார் நடிகர் விஜய். அவர் நடத்திய முதல் கட்சி மாநாடு கூட சினிமா நிகழ்ச்சி போல இருந்ததாக அரசியல் கட்சிகள்  விமர்சனம் செய்திருந்தனர். நடிகர் விஜய் இதற்கு முன்பு மெரினா போராட்டம் போன்றவைகளில் மாஸ்க் அணிந்தப்படி கலந்துக் கொண்டிருந்தாலும், இம்முறை புது கட்சி துவங்கி, வரும் 2026 தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், மக்கள் பிரச்சனையில்  முதன்முறையாக களமிறங்குகிறார். இன்று பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை நேரிடையாக சந்திக்க இருக்கிறார் விஜய்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு தொடர்ந்து அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து போராடி வரும் அப்பகுதி கிராம மக்கள், இது குறித்து தேர்தல் புறக்கணிப்பு, கிராம சபைக் கூட்டத்தில் எதிர்த்து தீர்மானம் என்று பல கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்த நிர்வாக அனுமதி அளித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது புதிய விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து கடந்த 900 நாட்களுக்கும் மேலாக அப்பகுதி  கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை இன்று நடிகரும், தவெக தலைவருமான விஜய் நேரில் சந்திக்கவுள்ளார். திறந்தவெளி மைதானத்திலேயே மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த தவெக தலைவர் விஜய் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இன்று ஜனவரி 20ம் தேதி மதியம் 1 மணியளவில் விஜய் அப்பகுதி மக்களை நேரில் சந்திக்க இருக்கிறார். 3 மணிநேரம் மட்டுமே விஜய் மக்களை சந்திக்க வேண்டும், பரந்தூர், ஏகனாபுரம், நாகப்பட்டு, நெல்வாய் உள்ளிட்ட 9 கிராம மக்களை மட்டுமே சந்திக்க வேண்டுமென கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிமாவட்டத்தை சேர்ந்த தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் வர வேண்டாம் என விஜய் கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.