“ஆளுநரைப் போலவே ஐஐடி தலைவரும் மாறிவிட்டார்” ... அமைச்சர் பொன்முடி பேட்டி!
Dinamaalai January 20, 2025 02:48 PM

ஐஐடி தலைவர் முதலில் கோமியம் குடிக்க வேண்டும். ஆளுநரைப் போலவே ஐ.ஐ.டி தலைவரும் மாறிவிட்டார் என அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார். 

விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரம் பகுதியில் ஒன்பதரை கோடி ரூபாய் செலவில், 1987ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்த 21 சமூக நீதி போராளிகள் மணிமண்டபம் மற்றும் திராவிட இயக்க முன்னோடி ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கத்தினை வருகிற 28ம் தேதி தமிழ்நாடு முதல்வர் திறந்து வைக்கவுள்ளார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டினை அமைச்சர் பொன்முடி, சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன் அன்னியூர் சிவா மற்றும் மாவட்ட ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “ஈரோடு இடைத்தேர்தலில் புறக்கணித்தவர்களுக்கு தோல்வி பயம். தமிழக மக்கள் அனைவரும் திராவிட மாடல் ஆட்சி நடத்துகிற ஸ்டாலினுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது தெரிந்துதான் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒதுங்கிவிட்டன. அதிமுக, பிஜேபி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் போட்டியிடவில்லை. திராவிட முன்னேற்ற கழகம் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்பதுதான்.

அங்கே போட்டியிடுபவர் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் பெரியாரைப் பற்றி விமர்சனம் செய்துவிட்டு அந்த தொகுதியில் வேட்பாளரை நிறுத்துகிறார். பெரியாருடைய மண். அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காது. 

ஐஐடி தலைவர் காமகோடி காய்ச்சலுக்கு கோமியம் குடிக்க கூறுகிறார். முதலில் அவர் குடிக்க வேண்டும். அவர் அதைத்தான் குடித்துக் கொண்டு இருக்கிறார் என நினைக்கிறேன். ஐஐடி போன்ற மிகச்சிறந்த கல்லூரியினுடைய இயக்குனர் இவ்வாறு பேசுவது என்பது உண்மையில் வருந்தத்தக்கது. அவர் முதலில் குடிக்க வேண்டும். அவர் ஏற்கனவே குடித்துக் கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன். அதனால் தான் இப்படி எல்லாம் பேசி வருகிறார்.

மாட்டு மூத்திரம் உடம்புக்கு கெடுதியானது என்று ஏற்கனவே அறிவியல் பூர்வமாக சொல்லப்பட்ட காலகட்டத்தில், அறிவியல் ரீதியான ஒரு பல்கலைக்கழகத்தில் இயக்குனராக இருந்து கொண்டு இப்படி சொல்லி இருப்பது எந்த அடிப்படையில், ஏன் இப்படி சொல்கிறார் என புரியவில்லை.

மக்கள் இதனை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவரும் ஆளுநரை போல மாறிவிட்டார் போல தெரிகிறது. அந்த அடிப்படையில் தான் இப்படி எல்லாம் பேசி வருகிறார். இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். குறிப்பாக பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் அறிவியல் ரீதியாக சிந்திக்ககூடிய, பகுத்தறிவு சிந்தனை உடையவர்கள் இவைகளை எல்லாம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது தான் நடைமுறை உண்மை” என்றார்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.