நாம் தமிழர் கட்சியினருக்கு அனுமதி மறுப்பா?! தேர்தல் அதிகாரி விளக்கம்!
Dinamaalai January 20, 2025 02:48 PM

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாக அக்கட்சியினர் குற்றச்சாட்டு கூறி வருகையில், இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா நாம் தமிழர் கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பாரபட்சம் இன்றி அனுமதி வழங்கப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பினை பார்வையிட்ட பின் ஈரோடு மாவட்ட ஆட்சியரும் ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், “இன்று மாலை 3 மணி வரை வேட்பு மனு திரும்ப பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே மூன்று பறக்கும் படைகள், 3 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2 வீடியோ கண்காணிப்பு குழு இருந்த நிலையில், தற்பொது கூடுதலாக ஒரு வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை ரூ.12,72,860  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் 3 லட்சத்து 30 ஆயிரத்து 860 திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது். விசாரணையில் ரூ.9,42,000 கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. மதுபானம் மற்றும் போதை பொருட்கள் என ரூ.37,733 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

நாதக வேட்பாளர் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக அக்கட்சியினர் தெரிவித்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அவர், சுவிதா போர்டல் ஆன்லைன் மூலமாக மட்டுமே பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதில் எத்தனை விண்ணப்பங்கள் வருகின்றன, எத்தனை விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கின்றன என்பதை தலைமை தேர்தல் அதிகாரி வரை பார்க்க முடியும்.

பாரபட்சமாக இதில் செய்ய முடியாது இவற்றை பார்வையிடுவதற்கான மூன்று பார்வையாளர்கள் இருக்கிறார்கள். விண்ணப்பித்திருந்தால் 24 மணி நேரத்திற்குள் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும், எந்த இடத்திலும் எந்த வேட்பாளரும் அலைகழிக்கப்படவில்லை, விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக  அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.

 

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.