ஒரே நாடு ஒரே தேர்தல்…. இந்தியாவில் இது ஒன்னும் புதுசல்ல…. வானதி சீனிவாசன்….!!!
SeithiSolai Tamil January 21, 2025 01:48 AM

கோவை தெற்கு சட்டசபை உறுப்பினரும் பாஜக மகளிர் அணி மாநில தலைவருமான வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியேற்றுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஜனவரி 18-ம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக வழக்கறிஞர்கள் அணி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ” ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம்’ மூலம், ஒற்றையாட்சி முறையை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியை சர்வாதிகாரியாக மாற்றவே இந்தத் திட்டம் பயன்படும்” என்றெல்லாம் பேசியிருக்கிறார். அதுமட்டுமில்லாது, ‘ஒரே நாடு’, ‘ஒரே மதம்’, ‘ஒரே மொழி’ என்று பாஜக அரசு பயணிப்பதாக எப்போதும் சொல்லும் அதே குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். அடிக்கடி ஆட்சி கவிழும் நிலையை தவிர்த்து, அரசியல் நிலைத் தன்மையை உருவாக்கவும், செலவுகளை குறைத்து, நாட்டின் வளர்ச்சியை விரைவு படுத்தவும்தான், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை பாஜக கூட்டணி அரசு முன் வைத்துள்ளது.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் என்பது இந்தியாவுக்கு புதிதல்ல. 1952 முதல் 1967 வரை நாடாளுமன்றத்திற்கும், மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடந்து வந்தது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில மாநில அரசுகளை, சர்வாதிகார காங்கிரஸ் அரசு கலைக்கத் தொடங்கிய பிறகுதான் தேர்தல் என்பது அடிக்கடி நடக்கும் ஒன்றாகிவிட்டது. நாடாளுமன்றத்திற்கும், சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும்போது தான், தமிழகத்தில் திமுகவும், கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆட்சியைப் பிடித்தது. ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் தேசிய கட்சி தான் வெற்றி பெறும் என்ற திமுகவின் வாதம் தவறானது.
ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தால் திமுகவும், அதன் தலைவர் மு.க. ஸ்டாலினும் அச்சமடைந்திருப்பது வழக்கறிஞர் மாநாட்டில் அவர் பேசியதிலிருந்து தெரிகிறது.

இந்தியாவை ஒரு நாடாக ஏற்காத, அரசியலமைப்பு சட்டப்படி தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்ற கோரிக்கையை கூட ஏற்க மனமில்லாத திமுகவுக்கு, ‘எப்போதும் தேசியத்தின் பக்கம்’ நிற்கும் தமிழக மக்களைப் பார்த்து அச்சம் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான், “திமுகவை அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானவர்களாக சித்தரிக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாக” கவர்னர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.சட்டப்பேரவையில் முதலில் தேசிய கீதத்தை பாட மறுத்த திமுகவின் ‘தேச விரோத முகம்’ அம்பலமானதால் திமுக கலக்கமடைந்திருக்கிறது. அதனால்தான் மத்திய அரசு மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அபாண்டமாக குற்றம்சாட்டி வருகிறார். ‘தந்தை – மகன் – பேரன்’ என, குடும்ப ஆட்சி நடத்தி வரும் திமுக இப்போது ‘கொள்ளுப் பேரனையும்’ களமிறக்க தயாராகி விட்டது.

ஒரே குடும்பம் தான் திமுகவின் ஒரே கொள்கை அந்த ஒரே குடும்பத்திலும் ஆண் வாரிசுகளுக்கு மட்டும்தான் மகுடம் சூட்டப்படும். ஆனால் பேசுவதெல்லாம் சமூக நீதிப் பெண்ணுரிமை நான்காவது தலைமுறையை அரசியலுக்கு கொண்டுவர இப்போதே ஆயத்த பணிகளை திமுக தொடங்கிவிட்டது. இந்த நான்காவது தலைமுறையிலாவுது வீட்டில் இருக்கும் பெண் வாரிசை கொண்டு வரலாமே, அதற்கு திமுகவுக்கு மனமில்லை. பாஜக விரிக்கும் வலையில் மத்திய அரசை ஆதரிக்கும் கூட்டணி கட்சிகள் விழுந்து விட வேண்டாம் என்று திமுக வழக்கறிஞர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசியிருக்கிறார். 10 ஆண்டுகள் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை இருந்தும் கூட்டணி கட்சிகளுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி.

தனிப் பெரும்பான்மை இல்லாத போதும் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்காமல் சர்வாதிகார ஆட்சியை நடத்தியது திமுக. யார் ஒற்றை ஆட்சி முறையை நடத்தி வருகிறார்கள் என்பதை இதிலிருந்து மக்கள் புரிந்து கொள்வார்கள். பாஜகவை பற்றியும் பிரதமர் நரேந்திர மோடியை பற்றியும் கூட்டணி கட்சிகள் நன்கு அறிவார்கள். பிரதமர் மோடியின் மீது முழு நம்பிக்கை வைத்து அவர்கள் மத்திய அரசை ஆதரித்து வருகிறார்கள். பாஜகவுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் இடையே விரிசல் வந்து விடாதா என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் இயங்கிக் கொண்டிருப்பது அவரது பேச்சிலிருந்து தெரிகிறது. கருவாடு ஒருபோதும் மீனாகாது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முழு ஐந்து ஆண்டுகளும் பதவி வகிக்கும் 2021 இல் நடக்கும் மக்களவைத் தேர்தலில் வென்று நான்காவது முறையாகவும் ஆட்சி அமைக்கும் அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.