செயற்கை நுண்ணறிவின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மற்றும் காலநிலை நெருக்கடி ஆகியவற்றை உலகளாவிய அச்சுறுத்தல்கள் என ஐ.நா. சபை பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இன்று நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்லத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த தொடர் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பல்வேறு நாடுகளின் அரசாங்க தலைவர்கள், சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள், வர்த்தக தலைவர்கள் மற்றும் பொருளாதார மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.
இக்கூட்டத்தின் 04-ஆம் நாளான இன்று உரையாற்றிய தலைவர்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
குறித்த கூட்டத்தில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பேசும் போது; தவறான தகவல்களை பரப்புவது மற்றும் சைபர் துன்புறுத்தல்களை அளிப்பது ஆகியவற்றை ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் தடுக்க சமூக ஊடக நிர்வாகத்தை சீர்திருத்த வேண்டும்.
டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை வலுவாக அமல்படுத்த வேண்டும். வெளிப்படைத்தன்மைக்கான ஐரோப்பிய மையத்திற்கான அதிகாரங்களை விரிவுபடுத்த வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் நன்மதிப்புகள் விற்பனைக்கு அல்ல.
ஐரோப்பாவின் புத்திசாலித்தனமான மனம், இந்த முக்கியமான சவாலை எதிர்கொள்வதை உறுதி செய்ய சமூக ஊடக அல்காரிதம்கள் குறித்த ஆராய்ச்சிக்கு அதிக நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அதனை தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் பேசும்போது, அதிகரித்து வரும் இரண்டு உலகளாவிய அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரித்துள்ளார். அவை, செயற்கை நுண்ணறிவின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மற்றும் காலநிலை நெருக்கடி என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் பேசுகையில், இந்த சவால்கள், மனிதகுலத்திற்கு இதுவரையில்லாத அபாயங்களை ஏற்படுத்துவதாகவும், அரசாங்கங்கள் மற்றும் தனியார் துறைகள் உடனடியாக ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.
மேலும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துவதற்கான ஒரு வரைபடமாக ஐக்கிய நாடுகள் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உலகளாவிய டிஜிட்டல் ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி பேசிய குட்டெரெஸ், இந்த விஷயத்தில் உலக நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டம் நாளையுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.