இந்தியாவில் 2008 முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 24ல் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக பெண்ணே பல பரிணாமங்களில் குடும்பத்தின் அச்சாணியாக தாங்கிநிற்கிறாள். ஆணின் உயர்வு என்பது அவனின் முன்னேற்றம் மட்டுமே. ஆனால் ஒரு பெண்ணின் உயர்வு அந்த குடும்பத்தின் உயர்வு.
ஆனால் இந்தியாவின் பல பகுதிகளில் இன்றும் பெண் குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை தொடர்கிறது. சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் வகையில் இன்று ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இந்நாள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சம உரிமை, பெண் முன்னேற்றம் மட்டுமல்ல அவர்களுக்கு நேரும் பிரச்சினைகளைத் தடுப்பது, அவர்களின் கல்வியை உறுதி செய்வதும் இந்நாளின் நோக்கமாக கொள்ளப்பட்டுள்ளது. பாலின சமநிலை, சமவேலைக்கு சமஊதியம் என அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. பெண்ணுக்கு சம உரிமை அளிப்பதுடன் அவளுக்கு எதிரான குற்றங்களை களைவதிலும் முன்னுரிமை அளிப்போம். பெண்களை மதிப்போம் சக மனிதராக என இந்நாளில் உறுதி ஏற்போம்.