`பவதாரணி கல்யாணத்துல, `சாதிச்சிட்டீங்க'ன்னு சொன்னார் ராஜா சார்..!' - சாதகப்பறவைகள் சங்கர் Exclusive
Vikatan January 24, 2025 05:48 PM

`தன்னோட கல்யாணத்துல, இவர் இசைக்குழுவோட கச்சேரிதான் வைக்கணும்னு பவதாரிணியே தன் அப்பா இளையராஜாகிட்ட சொன்னாங்களாம்.’

`காலம் சென்ற பின்னணிப்பாடகர் ஷாகுல் அமீது மகளோட கல்யாணத்துக்கு இவர் இசைக்குழுவோட கச்சேரிதான் வைக்கணும்னு ஏ.ஆர். ரகுமான் சொன்னாராம்.’

அட... அது யாரோட இசைக்குழுன்னு கேட்கிறீங்களா..? ஒரு நிமிஷம்... இன்னும் நிறைய சர்ப்பரைஸ் இருக்கு.

ஓர் இசைக்கச்சேரியில, பின்னணிப் பாடகிகள் பி.சுசீலாவும், ஜானகியும் ஒரே ஸ்டேஜ்ல டூயட் பாடுவாங்க. அப்போ ஜானகி அம்மா ஆண் குரல்ல பாடியிருப்பாங்க. அது இவரோட மியூசிக் ட்ரூப்ல தான்.

வயலின் ஜாம்பவான் குன்னக்குடி வைத்தியநாதன் ஒரு கச்சேரியில கோட், சூட் அணிஞ்சுக்கிட்டு வருவார். அது நிகழ்ந்ததும் இவரோட மியூசிக் ட்ரூப் நடத்தின கச்சேரியிலதான். இத்தனை ‘வாவ்’களுக்கும் சொந்தக்காரர் ‘சாதகப்பறவைகள்’ மியூசிக் ட்ரூப் சங்கர்தான். இன்றைக்கு யோகிபாபு நடிப்பில் வெளிவந்திருக்கும் ’குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ படத்தோட இசையமைப்பாளரும் இவர்தான். அவருடன் உரையாடினோம்.

குழந்தைகள் முன்னேற்ற கழகம்

``கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகத்தோட மகன் நான்.  மார்கழியிலும் பண்டிகை நாட்களிலும் திருவிழாக்களிலும் ஒலிக்கிற விநாயகனே வினை தீர்ப்பவனே, நீயல்லால் தெய்வம் இல்லை, திருப்பதி மலை வாழும் வெங்கடேசா, சின்னஞ்சிறு பெண்போலே பாடல்களையெல்லாம் எழுதினது எங்கப்பாதான்.

அந்தப் பாடல்களையெல்லாம் பாடிய சீர்காழி கோவிந்தராஜன் என்னுடைய சித்தப்பா. அப்பா கடைசியா எழுதிய பாட்டு என் ராசாவின் மனசிலே படத்துல வர்ற ‘பாரிஜாத பூவே' பாடல்தான். என்னோட அண்ணன் சரவணன் பூவே உனக்காக, சூரிய வம்சம், ஆஹா, வல்லரசு  படங்களோட கேமரா மேன்; சிலம்பாட்டம் படத்தோட டைரக்டர். 

என்னோட அக்கா வித்யாவும் நிறைய பின்னணி பாடியிருக்காங்க. ’இணைந்த கைகள்’ படத்துல வர்ற மலையோரம் குயில் கூவ, ’உரிமை கீதம்’ படத்தூல வர்ற மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம் பாட்டெல்லாம் அவங்க பாடினதுதான்’’ என்று பூரிப்பாக தன்னையும் தன் குடும்பத்தினரையும் அறிமுகப்படுத்திக்கொண்டவர், தான் இசைக்குழு ஆரம்பித்தது முதல் தன்னுடைய இசைக்குழுவில் பாடிய புகழ்பெற்ற பின்னணிப்பாடகர்களுடன் தான் பெற்ற மகிழ்ச்சியான அனுபவங்கள் வரை நம்மிடம் பகிர ஆரம்பித்தார். 

சாதகப்பறவைகள் இசைக்குழு

’’இசைக்கல்லூரியில படிக்கிறப்போ கல்லூரிகளுக்கு இடையேயான இசைப்போட்டியில் கலந்துக்கிறப்போ உருவான இசைக்குழுதான் பின்னாள்ல சாதகப்பறவைகள் இசைக்குழுவா மாறுச்சு. சாதகப்பறவைகள் பற்றி சங்க இலக்கியங்கள்ல என்ன சொல்லி இருக்குன்னா, ’சாதகப்பறவைகள் நம்ம கண்களுக்கு அகப்படவே ஆசைப்படாதாம். ஆனா, சதாசர்வகாலமும் பாட்டு பாடிக்கிட்டே இருக்குமாம்.

பனித்துளிகள் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழுமாம். அதை வேடர்கள் எப்படிப் பிடிப்பாங்களாம் தெரியுமா..? அழகான இசையை எழுப்பி, அதைக் கேட்டு அது அந்தப் பகுதிக்கு வந்ததும், பயங்கரமா சத்தம் எழுப்புவாங்களாம். அந்த சத்தத்தைக் கேட்டவுடனே சாதகப்பறவைகள் இறந்துப் போயிடுமாம். அந்தளவுக்கு சாதகப்பறவைகள் நல்ல இசையை மட்டுமே கேட்குமாம்.

சாதகப்பறவைகள் இசைக்குழு

எங்க இசைக்குழு இதுவரைக்கும் உலகம் முழுக்க 8 ஆயிரம் நிகழ்ச்சிகளுக்கும் மேல நடத்தியிருக்கு. கிட்டத்தட்ட எல்லா பாடகருமே எங்களுடைய இசைக்குழுவுல பாடியிருக்காங்க. 

எனக்கு இசை அமைக்கணும்கிற ஆசை நிறைய இருந்துச்சு. ஆனா, இறைவனுடைய விருப்பம் இசைக்குழு ஆரம்பிக்கணும்னு இருந்திருக்கு.

வாலி சார் எழுதின ’கலைஞர் காவிய’த்தை அவரோட குரல்ல பேசி ஓர் ஆல்பமா வெளியிட்டோம். அப்போ வாலி சார் குரலுக்கு பின்னணி இசை அமைச்சுருக்கேன். ’என்னோட பாடல்களுக்கு நிறைய பேர் கம்போஸ் பண்ணியிருக்காங்க. என்னோட குரலுக்கு மியூசிக் கம்போஸ் பண்ண ஒரே ஆள் நீ தான்’னு வாலி சார் சொல்வார். 

சன் பிக்சர்ஸ் லோகோ மியூசிக் நான் இசையமைச்சதுதான்.

கல்லூரி காலம், வைதேகி, அக்கா, ரங்க விலாஸ்னு  சில சீரியல்களுக்குக்கூட டைட்டில் சாங் இசையமைச்சிருக்கேன்.
சூரியன் எஃப்எம், மிர்ச்சி எஃப்.எம்.முக்கு ஜிங்கிள்ஸ் இசையமைச்சிருக்கேன். தவிர, நிறைய பிரைவேட் ஆல்பம்ஸ் பண்ணியிருக்கேன். இந்த நேரத்துலதான் சகுனி படத்தோட டைரக்டர் சங்கர் தயாள், அவரோட ’குழந்தைகள் முன்னேற்ற கழகம் படத்துக்கு மியூசிக் பண்றீங்களா’ ன்னு கேட்டாரு. உடனே ஓகே சொல்லிட்டேன்’’ என்றவர், தொடர்ந்தார்.  

குழந்தைகள் முன்னேற்ற கழகம் ’’எஸ்.பி.பாலசுப்ரமணியம் சார்"

’’எஸ்.பி.பாலசுப்ரமணியம் சார்கூட மட்டும் 100 ஷோக்களுக்கு மேல செஞ்சிருப்போம். அவ்ளோ பெரிய லெஜன்ட், ’எந்தப் பாட்டை முதல்ல பாடணும், எதை ரெண்டாவது பாடணும்னு நீ சொல்லு நான் பாடுறேன்’னு சொல்வார். ‘எப்போ நீ கூப்பிடுறியோ அப்போ ஸ்டேஜுக்கு வரேன்’பார். ’இந்த ஷோவுக்கு நீ தான் டைரக்டர். நீ சொல்றதுதான் நான் கேட்பேன்’னு ரொம்ப தன்மையா சொல்வார்.

ஒருமுறை கச்சேரிக்காக நாங்க ஃபிரான்ஸ்க்கு போயிருந்தப்போ இசைக்குழுவுக்கான பஸ் வந்துருச்சு. ஆனா, அவருக்கு அரேஞ்ச் பண்ணியிருந்த கார் வரல. ஆர்கனைசர் மிஸ் பண்ணிட்டார். ’நான் என் குழந்தைகளோட பஸ்ஸிலேயே வர்றேன்’னு எங்க கூடவே வந்தார். இப்படி அவரைப்பத்தி நிறைய சொல்லிக்கிட்டே போகலாம். 

சுசீலா அம்மா, ஜானகி அம்மா

ஜானகி அம்மாவுக்கு எங்க ட்ரூப்னா ரொம்ப பிடிக்கும். உங்க மியூசிக் குவாலிட்டியா இருக்குன்னு சொல்வாங்க. சுசீலா அம்மா, ஜானகி அம்மா ரெண்டு பேரையும் ஒண்ணா சேர்த்து ஒரு புரோகிராம் சென்னையில நடத்தினோம். கடந்த 40 வருடங்கள்ல நேரு ஸ்டேடியத்துல அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா இணைஞ்சு பாடினது அந்த நிகழ்ச்சியிலதான். சாயங்காலம் நாலரை மணிக்கே ஸ்டேடியத்தை மூடினது அந்த நிகழ்ச்சியிலதான். அதுக்குள்ள 9 ஆயிரம் பேர் ஸ்டேடியத்துக்குள்ள வந்துட்டாங்க. ஸ்டேடியத்துக்கு வெளியில கிட்டத்தட்ட 4000 பேர் நின்னுக்கிட்டு இருந்தாங்க. அந்த புரோகிராம்ல சுசீலா அம்மாகூட ஆண் குரலில் ஜானகி அம்மா டூயட் பாடினாங்க. அதெல்லாம் மறக்கவே முடியாது அனுபவம்.

எஸ். ஜானகி `அதுதான் ஜானகியம்மா...'

இன்னொரு ஷோ ஜானகி அம்மாவை மட்டும் வெச்சு செஞ்சிருந்தோம். அந்த ஷோவுக்கு ஜானகி அம்மா உடுத்திக்கிட்டு வர்றதுக்கான விலை உயர்ந்த புடவை வாங்கி வெச்சிருந்தோம். நிகழ்ச்சிக்கு முந்தின நாள் ஜானகி அம்மாவோட ரசிகர் ஒருத்தர் அவங்களுக்கு ஒரு புடவை அனுப்பி வெச்சிருக்கார். நைட் ஒரு மணிக்கு ஜானகியம்மா எனக்கு போன் பண்ணாங்க. ஒன்றரை மணிக்கு அவங்க வீட்டுக்குப் போனேன். ஒரு புடவையைக் காட்டி இந்தப் புடவையைத்தான் நாளைக்கு நான் கட்டப் போறேன். இது என்னோட ரசிகர் ஒருத்தர் எனக்கு அனுப்பினது. நாளைக்கு நடக்கப்போற ஷோவுக்கு அவன் கண்டிப்பா வருவான். அப்போ அவன் அனுப்பிய இந்தப் புடவையை நான் கட்டிக்கிட்டு நிக்கலைன்னா அவன் ரொம்ப வருத்தப்படுவான் இல்லையா.. அதனால, அவன் அனுப்பின புடவையைத்தான் நாளைக்கு கட்டிப்பேன்னு சொல்லிட்டாங்க. ஆனா, அந்தப் புடவை ரொம்ப சிம்பிளா இருந்துச்சு. எங்க ஈவென்ட் மேனேஜர் இந்தப் புடவை ரொம்ப சிம்பிளா இருக்கே மேம்னு சொன்னாரு. அது பரவாயில்ல. ஆனா, அவன் வருத்தப்படக்கூடாதுன்னாங்க.

சுசீலா அம்மா ஒரு டிரஸ்ட் வச்சிருக்காங்க. அது வழியா, இசை சம்பந்தப்பட்ட நிறைய பேருக்கு சத்தம் இல்லாமல் உதவி பண்ணிட்டு இருக்காங்க. சில பேருக்கு மாசம் மாசம் பென்ஷன் மாதிரி ஒரு தொகைகூட அனுப்பிட்டிருக்காங்க.

பி.சுசீலா

எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா பாட வந்து 50 வருஷம் முடிஞ்சப்போவும் எங்க ட்ரூப்தான் அவங்கள வச்சு ஒரு நிகழ்ச்சி பண்ணுச்சு. ஜெயச்சந்திரன் சாரைப்பத்தி சொல்லணும்னா, தான் ஒரு ஜமீன்தார் வீட்டுப்பிள்ளைங்கிற பந்தா அவர் கிட்ட எதுவுமே இருக்காது. ஒரு முறை எங்க நிகழ்ச்சியில அவர் பாட வந்தப்போ வரிகளை இங்கிலீஷில் எழுதிக் கொடுத்தோம். தமிழ்ப்பாட்டை தமிழ்ல எழுதி கொடுங்கப்பான்னு சொன்னார். ஹரிஹரன், சங்கர் மகாதேவன் ரெண்டு பேரையும் ஒண்ணா சேர்த்து முதல் முறை ஷோ பண்ணதும் நாங்கதான்.

பவதாரணி கல்யாணத்துல காலையில 9 மணிக்கு ஆரம்பிச்சு சாயங்காலம் நாலு மணி வரைக்கும் ராஜா சார் பாடல்கள் மட்டுமே பாடினோம். கச்சேரி முடிஞ்சு அவர்கூட சாப்பிட உட்காரும்போது ’சாதக பறவைகள் சாதிச்சிட்டீங்க’ன்னு சொன்னார் ராஜா சார். இதுக்கு மேல என்ன வேணும் சொல்லுங்க... மக்களை சந்தோஷப்படுத்துற வேலை பார்த்துட்டிருக்கிறேன். அந்த வேலையை செய்யுறப்போ நானும் சந்தோஷமா இருக்கேன். இது யாருக்கும் கிடைக்காத கொடுப்பினை அல்லவா’’ என்கிறார் ‘சாதகப்பறவைகள்’ சங்கர்.

இசையுலகில் இன்னமும் ஜெயிக்க வாழ்த்துகள் சார்!

Vikatan Play

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.