சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார் நடிகர் கஞ்சா கருப்பு. பாடகர் மனோ வீட்டுக்குப் பின்புறம் அமைந்துள்ள பாரதி பார்க் அருகே இருக்கிறது இவர் வாடகைக்குக் குடியிருக்கும் வீடு. இவரின் வீட்டு உரிமையாளர் பெயர் ரமேஷ். சென்னை தி.நகர் உள்ளிட்ட பல இடங்களில் சூப்பர் மார்க்கெட்டுகளை நடத்தி வருகிறார் என்கிறார்கள்.
கஞ்சா கருப்புக்கும் அவரது வீட்டு உரிமையாளருக்கும் இடையில் சமீப சில மாதங்களாக பிரச்னை உண்டாகி அதன் தொடர்ச்சியாக இன்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்க இருக்கிறாராம் கஞ்சா கருப்பு.
என்ன விவகாரமாம்? அவரிடமே பேசினோம்.
கஞ்சா கருப்பு‘’அண்ணே, இந்த வீட்டுக்கு நான் குடிவந்து நாலு வருஷம் ஆச்சு. வாடகை இருபதாயிரம். போன மாச வரை கரெக்டா கொடுத்துட்டு வந்திருக்கேன். இதுவரை வாடகை தாங்கன்னு அவர் கேக்க மட்டார். அதுக்கு முன்னாடியே கொடுத்துடுவேன்.
வீட்டுல ஏதாவது வேலைன்னாலும் சில சமயம் சொன்னவுடனே வந்து பண்ணித் தந்திருக்கார். சில சமயம் நானே பண்ணிடுவேன். அதுலெல்லாம் எந்தப் பிரச்னையுமில்ல.
நல்லாத்தான் அண்ணே, போயிட்டிருந்திச்சு எங்களுடைய ஹவுஸ் ஓனர் – டெனன்ட் ரிலேசன்ஷிப். ஆனா என்னன்னே தெரியலை, திடீர்னு மனுஷன் மாறிட்டார். திடீர்னு வந்து வீடு எனக்கு வேணும் நின்னார்.
`வேற வீடு கிடைச்சதும் காலி செய்யத்தான் போறேன்'என்னய்யா சொல்றீகனு கேட்டா, ஆமாங்க, நீங்க காலி பண்ணிடுங்க, வீடு வேனும்னு சொன்னார். சரி டைம் கொடுங்க காலி செய்யறேனு சொல்லிட்டேன்.
அப்புறம் விசாரிச்சா அவர் லீசுக்கு வீட்டை விட ஆசைப்பறார்னு தெரிய வந்திச்சு.
அந்த லீஸ் பணத்தை நான் தர்றேன்னு சொல்லிப் பார்த்தேன், அப்பவும் சம்மதிக்காம வீட்டை காலி பண்ண வைக்கிறதுலயே குறியா இருக்கார்.
சரினு நானும் வேற வீட்டைத் தேட ஆரம்பிச்சிட்டேன். ஆனா உடனே வீடு கிடைக்கனுமில்லையா, கிடைக்காம இப்பவும் தேடிட்டிருக்கேன். கிடைச்சதும் காலி செய்யத்தான் போறேன்.
இப்படியிருக்கயில வீட்டுல ஆள் இல்லாத போது, அதாவது நான் மதுரையில இருந்தப்ப ரெண்டு நாள் முன்னாடி பூட்டை உடைச்சு வீட்டுக்குள் போய் பொருட்களையெல்லாம் தூக்கி ஓரமா வச்சிட்டு வெள்ளையடிச்சிருக்காங்க.
கஞ்சா கருப்பு `என் கலைமாமணி விருது டாலரையெல்லாம் காணோம்’அக்ரிமெண்ட் எல்லாம் போட்டுதான் வந்தேன். ஆனா அந்த அக்ரீமெண்டையும் ஒரு வருஷத்துக்குப் பிறகு புதுப்பிச்சே தரலை.
ஏன் நம்மை இந்தப் பாடு படுத்தறானு விசாரிச்சா, சினிமாக்காரங்கன்னா ஏமாத்தி வீட்டை ஆட்டையப் போட்டுடுவான்னு பயப்படறார்னு சொன்னாங்க, அவருக்குத் தெரிஞ்ச சிலர். வாடகைக்கு விடறப்ப நான் சினிமாக்காரன்னு தெரிஞ்சுதான் விட்டார்.
பேசாம நடிச்சிட்டிருக்காம, படம் எடுக்கறேன்னு கிளம்பி சொந்த வீட்டை வித்தவன் நான். வாடகை வீட்டுல இருந்தாலும் கடன் இல்லாம நிம்மதியா இருக்கேன்னு நினைச்சுட்டு இருந்தேன். அதுல யார் கண் பட்டுச்சோ, இந்த மாதிரி போலீஸ் ஸ்டேஷன்லாம் போற மாதிரி ஆகிடுச்சு.
ஊருக்கே தெரியும் நான் ஏமாந்த கதை. அதைப் பத்தி அவருக்குத் தெரியாதானு தெரியலை. ஆனா என் மூஞ்சைப் பாத்தும், ‘ஏமாத்திடுவான்’ நினைக்கிறார் பாருங்க ஒருத்தர், அதான் பெருங் கொடுமை.
எனக்கு என்னன்னா வீட்டைக் காலி செய்துடுறேனு சொன்ன பிறகும் பூட்டை உடைச்சு உள்ள போறது என்ன நியாயம்? என் வீட்டுக்குள் இருந்த என் கலைமாமணி விருது டாலரையெல்லாம் காணோம். அதான் போலீஸுக்கு சொல்ல வேண்டியதாகிடுச்சு. இனி போலீஸ் என்ன சொல்லுதோ அதைக் கேட்டுக்கிடலாம்’’ என்கிறார்.!
இந்த விவகாரத்தில் ஹவுஸ் ஓனர் எந்த விளக்கத்தையும் தரவில்லை. அவர் விளக்கம் தரும்பட்சத்தில் அதனை உரிய பரிசீலனைக்கு பின்னர் பதிவிட தயாராக உள்ளோம்.!