விசிக முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், தவெகவில் இணைந்த சில மணி நேரங்களில் சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் சென்று அவர் அங்கு திருமாவளவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஆதவ் அர்ஜுனாவுடனான சந்திப்புக்கு பின் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் ஆதம் அர்ஜுனாவின் சந்திப்பு பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், ஆதவ் அர்ஜுனா விசகவை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டபோது அதை ஒரு பகையாக கருதவில்லை. கருத்தியல் ரீதியாக முரண்கள் இருந்தாலும், களத்தில் எதிரெதிர் துருவங்களில் நின்று செயல்பட்டாலும் இத்தகைய நட்புறவை பேணுவது அரசியலில் ஒரு நாகரீகமான அணுகுமுறை.
எங்கள் சந்திப்பில் எந்த அரசியல் கணக்கும் இல்லை. வேறு கட்சியில் இணைந்தாலும் மரியாதை நிமித்தமாக ஆதவ் அர்ஜுனா என்னை சந்தித்தார்.
இதில் அரசியல் கிடையாது. பெரியாரின் தேவை இன்றியமையாத ஒன்றாக உள்ளதாக ஆதவ் என்னிடம் பகிர்ந்தார். ஆதவ் அர்ஜுனாவுக்கு எனது வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.