வளர்ச்சிக்கான சக்திவாய்ந்த உந்துசக்தியாக மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது - தமிழக ஆளுநர்!
Seithipunal Tamil February 02, 2025 07:48 AM

வளர்ச்சிக்கான சக்திவாய்ந்த உந்துசக்தியாக மத்திய பட்ஜெட் அமைந்துள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "அசாதாரணமான வரலாற்று சிறப்புமிக்க அனைத்தையும் உள்ளடக்கிய 2025-26 நிதிநிலை அறிக்கையை வழங்கிய பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி. 

இந்த நிதிநிலை அறிக்கை, அனைவருடனும் அனைவரின் நலனுக்காகவும் என்ற உணர்வை உண்மையிலேயே பிரதிபலிக்கும் வகையிலும் ஒவ்வொரு குடிமகனை வளப்படுத்தி, அவர்களுக்கு தரமான சுகாதாரம் மற்றும் கல்விக்கான அணுகலை விரிவுபடுத்தும் வகையிலும் வளர்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற லட்சியத்தை எட்டுவதற்கான ஒரு உறுதியான பாதையை வகுக்கும் வகையிலும் உள்ளது.

ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் இந்த நிதிநிலை அறிக்கை, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையை வலுப்படுத்துவதுடன் நமது மக்களின் தொழில்முனைவு ஆற்றலை வெளிப்படுத்துகிறது, இந்தியாவில் தயாரிப்போம் என்ற முன்முயற்சி மூலம் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது, இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக நிலைநிறுத்துகிறது. இது வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், தொழில்முனைவோரை வளர்ப்பது, ஜவுளி மற்றும் மீன்வளத் துறைகள் உள்பட நிலையான விரிவான வளர்ச்சியை இயக்குவதை நோக்கமாகக் கொண்டது.

இந்த நிதிநிலை அறிக்கை புதுமை, தொழில்நுட்பம், இணைப்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புகளுக்கு வலுவான முக்கியத்துவத்தை அளிக்கிறது, கிராமப்புற-நகர்ப்புற பிளவுகளை இணைக்கிறது, எந்த குடிமகனும் பின்தங்கியிருக்கவில்லை என்பதை உறுதி செய்கிறது. 

பாரதிய பாஷா புஸ்தக் திட்டம் மற்றும் டிஜிட்டல் அறிவுக் களஞ்சியம், நமது பூர்வீக ஞானத்தையும் தாய்மொழியையும் பாதுகாத்து ஊக்குவிக்கும், நமது பாரதிய அறிவு முறையை வளப்படுத்தும். காலநிலைக்கு ஏற்ற சீர்திருத்தங்களுக்கான உறுதியான அர்ப்பணிப்புடன், இந்த நிதிநிலை அறிக்கை, பொருளாதார வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் இடையில் சரியான சமநிலையை ஏற்படுத்துகிறது. இந்த நிதிநிலை அறிக்கை பாரம்பரியத்தில் பெருமை கொள்ளும் வளர்ச்சிக்கான சக்திவாய்ந்த உந்துசக்தியாகும்" என்று தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.