Actor Manikandan: தமிழ் சினிமாவில் டிவி நிகழ்ச்சி மூலமாக அறிமுகமான நடிகர் மணிகண்டன் பல இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கின்றார். அதன்பிறகு திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த மணிகண்டன் ஜெய் பீம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானார். இந்த திரைப்படத்தில் ராஜாக்கண்ணு என்கின்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து நடிகர்களிடையே தன்னை பதிவு செய்து கொண்டார்.
அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த குட் நைட் மற்றும் லவ்வர் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ஹீரோவாக நடிக்க தொடங்கிய முதல் இரண்டு திரைப்படங்களிலேயே தன்னை சிறந்த நடிகராக நிலைநிறுத்திக் கொண்ட மணிகண்டன் மூன்றாவதாக குடும்பஸ்தன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை கொடுக்க ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்திருக்கின்றார் மணிகண்டன்.
குடும்பஸ்தன் திரைப்படம்: அறிமுக இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் மணிகண்டன் குரு சோமசுந்தரம், சான்வி மேக்னா, ஆர் சுந்தரராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இன்றைய காலகட்டத்தில் ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இளைஞன் காதலித்து திருமணம் செய்து கொண்டு வேலையை இழந்து எவ்வளவு கஷ்டங்களை சந்திக்கின்றான்.
கடன் வாங்கி என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கின்றான் என்பதை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்கள். படம் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இப்படத்தை சினிமாக்காரன் நிறுவனம் தயாரித்திருந்தது.
படத்தின் வசூல்: குடும்பஸ்தன் திரைப்படம் அனைத்து தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த காரணத்தால் படம் ரிலீஸ்-ஆன முதல் நாளிலிருந்து நல்ல வசூலை கொடுத்து வருகின்றது. அதன்படி முதல் நாளில் இந்த திரைப்படம் ஒரு கோடி ரூபாய் வசூலை அள்ளியது. மூன்று நாட்களில் 3.3 வசூல் செய்த நிலையில், நான்காவது நாளில் உலகம் முழுவதும் 7.5 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது.
அதனை தொடர்ந்து தற்போது படம் வெளியாகி நேற்றுடன் 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இந்த திரைப்படம் மொத்தம் 16.2 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த வருடம் ஜனவரி மாதம் வெளியான திரைப்படங்களிலேயே மதகஜராஜா திரைப்படம் மற்றும் குடும்பஸ்தன் இரண்டு திரைப்படம் தான் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது.