திருநெல்வேலியில் நடைபெற்ற அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கிய "சமையல் சூப்பர் ஸ்டார்" சீசன் 2 பெரும் கோலாகலத்துடன் நிறைவு பெற்றது. இந்த நிகழ்வில் திருநெல்வேலி, தென்காசி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
போட்டியாளர்கள் தங்கள் சமையல் திறனைப் படைத்துக் காட்ட வித்தியாசமாக பிளேட்டிங் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர்.
பிரபல செஃப் தீனா நடுவராக இருந்து, உணவுகளை ருசிப்பதோடு மட்டுமல்லாது, போட்டியாளர்களின் முயற்சியைப் பாராட்டினார். "நான் பல இடங்களில் சமையல் போட்டிகளில் நடுவராக இருந்திருக்கிறேன், ஆனால் இங்கே சமையலின் தரம் மிகச் சிறப்பாக உள்ளது," என்று அவர் குறிப்பிட்டார். முதல் சுற்றில் 126 பேரில் இருந்து 20 பேர் இரண்டாம் சுற்றுக்குத் தேர்வாகினர்.
இரண்டாம் சுற்றில் பங்கேற்றவர்களுக்குப் பூண்டு களி, இடியாப்ப பிரியாணி, மீன் குழம்பு, பூசணிக்காய் அல்வா, மண்பானை சமையல் போன்ற பாரம்பரிய உணவுகளைச் சமைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்ட 10 போட்டியாளர்கள் நேரடி சமையலுக்கு தேர்வாகினர்.
இறுதிப் போட்டியில் ஒரு மணி நேரத்திற்குள் பங்கேற்பாளர்கள் ரவா பாயசம், பன்னீர் சூப், கோதுமை ரவை பிரியாணி, கருப்பட்டி அப்பம், சிக்கன் வறுத்து அறைச்ச கறி போன்ற உணவுகளைச் சமைத்துக் களமிறங்கினர்.
செஃப் தீனா சிறப்பாக சமையல் செய்த ஸ்ரீமதி, சயீத் அலி பாத்திமா, ஷெரின் லத்தீப் ஆகிய மூவரை வெற்றியாளர்களாகத் தேர்வு செய்தார். இறுதிச் சுற்றில் பங்கேற்ற 10 போட்டியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.