2025 – 2026 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் தாக்கல் செய்த நிலையில், 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி விலக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டு இருந்தார். வருமானவரி விலக்கு 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை பிரச்சனையை தீர்க்கக் கூடிய வகையில் பட்ஜெட்டில் எந்த ஒரு திட்டமும் இடம்பெறவில்லை என்று தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், பட்ஜெட்டில் தமிழ்நாடு இடம்பெறவில்லை என தமிழக கட்சியினர் தொடர்ந்து கூச்சலிட்டு கொண்டிருக்கின்றனர். ஆனால் நீங்கள் திராவிட மாடல் என்று சொல்வதற்கு பதிலாக தமிழ்நாடு மாடல் என்று சொல்ல வேண்டியது தானே? தமிழகத்திலிருந்து வந்த ஒருவர் தொடர்ந்து எட்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். திருக்குறள் பற்றியும் பேசி உள்ளார். தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்க வேண்டும் என்பதில் பாஜக குறிக்கோளாக உள்ளது. 12 லட்சம் சம்பளம் பெறுபவர்கள் ஆண்டுக்கு வரி செலுத்த வேண்டாம் என்று பட்ஜெட்டில் வெளியாகிய அறிவிப்பு தமிழர்களுக்கும் பொருந்தும் தானே என்று தெரிவித்துள்ளார்.