காவல் நிலையத்திற்கும், உயர் காவல் துறை அதிகாரிக்குமே பாதுகாப்பு இல்லாத அவல நிலையை உருவாக்கிய தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களுக்கும், பொதுமக்களின் உடைமைகளுக்கும் பாதுகாப்பினை வழங்கி நாட்டை அமைதிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய கடமை காவல் துறைக்கு உண்டு. ஆனால், கடந்த 44 மாத கால தி.மு.க. ஆட்சியில் காவல் துறைக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை நிலவுகிறது. சமூக விரோதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்க வேண்டிய காவல் துறை செயலிழந்து இருப்பது மிகுந்த கவலையளிக்கும் விஷயமாகும். காவல் துறை சார் ஆய்வாளர், காவலர், சிறை காப்பாளர், தீயணைப்புத் துறை வீரர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகள் கடந்த ஆண்டு நடைபெற்றதாகவும், அந்தத் தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதனை காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநர் விசாரணை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதில் நடைபெற்ற முறைகேடுகளை, காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கட்டிக்காட்டியதாகவும், இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவருடைய அறையில் தீப்பிடித்ததாகவும், இந்தத் தீவிபத்து தன்னை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், இது தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே காவல் துறை தலைமை இயக்குநரிடம் புகார் அளித்ததாகவும், ஆனால் இதுகுறித்து இதுவரை முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்றும் காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநர் கூறியுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது பேரதிர்ச்சியை அளிக்கிறது.